நடிகர் சிவகார்த்திகேயனின் ’எஸ்கே 20’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், லைகா இணைந்து தயாரித்த ‘டான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படம் 12 நாள்களில் உலக அளவில் ரூ. 100 கோடி வசூலை அள்ளியதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சிவகார்த்திகேயன் ’ஜதிரத்னலு’ இயக்குநர் அனூதிப்புடன் இணைந்து தமிழ் – தெலுங்கில் உருவாகும் பைலிங்குவல் படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில், சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோசப்கா நடிக்கிறார். சத்யராஜ் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார். இந்த நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதியை படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ‘எஸ்கே20’ படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தேதியில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘விருமன்’ திரைப்படமும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.








