10 பேரின் உயிரை பறித்த சிவகாசி செங்கமலபட்டி பட்டாசு ஆலை சட்ட விரோதமாக இயங்கியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் சுதர்சன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலையில் நேற்று திடீரென எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டது. தொடர்ந்து, அடுத்தடுத்த அறைகளுக்கும் தீ பரவியது. அங்கிருந்த பட்டாசுகளும் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆலையில் உள்ள 7 அறைகள் தரைமட்டமாகின.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில் பெண்கள், ஆண்கள் என மொத்தம் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை அடுத்து, பட்டாசு ஆலை உரிமையாளர் சரவணனிடம் நடத்திய விசாரணையில், நாக்பூர் உரிமம் பெற்று பட்டாசு தொழில் செய்து வந்ததாகவும் பின்பு சட்ட விரோதமாக அவர் வம்பிழுந்தான் முக்கு அருகில் முத்துகிருஷ்னன் என்பவருக்கு பட்டாசு ஆலையை குத்தகைக்கு விட்டதும் தெரியவந்தது. அதோடு, குத்தைக்கு எடுத்த முத்துகிருஷ்ணன், போர்மேன் சுரேஷ் மேற்பார்வையில் பட்டாசு ஆலையை இயக்கியிருக்கிறார். மேலும் உரிமம் பெற்ற கட்டடத்தில் பட்டாசுகளை தயாரிக்காமல், அளவுக்கு அதிகமான ஆட்களை மரத்தடியில் வைத்து, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலும் பட்டாசுகளை தயாரித்தது அம்பலமாகியுள்ளது. இதனால் தான் உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து நிகழ்ந்து 10 உயிர்கள் பறிபோயிருக்கிறது.
இந்நிலையில், மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் என தெரிந்திருந்தும் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் கொடுக்காமலும் பட்டாசுகளை தயாரிக்க பணித்த பட்டாசு ஆலையின் உரிமையாளர் சரவணன் மற்றும் குத்தகைக்கு எடுத்த முத்துக்கிருஷ்ணன் மற்றும் போர்மேன் சுரேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் குத்தகைக்கு எடுத்த முத்துகிருஷ்ணன் மற்றும் போர்மேன் சுரேஷ் கைது செய்யப்பட்டதோடு, பட்டாசு ஆலை சட்ட விரோதமாக இயங்கியதாக FIR-ம் பதிவு செய்யப்பட்டுள்ளது.







