சகோதரிகளே…உங்கள் பாதுகாப்புக்காக அதிமுக போராடும் – எடப்பாடி பழனிசாமி பதிவு !

சகோதரிகளே, உங்கள் பாதுகாப்புக்காக என்றைக்கும் அதிமுக போராடும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் மகளிர் தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

“அன்பை அள்ளிக் கொடுப்பதில் அன்னையாக, அறிவை அருளும் ஆசிரியையாக, பாசத்தோடு அரவணைக்கும் சகோதரியாக, மனதோடு மனம் கலந்த மனைவியாக, மகளாக, நட்பைக் காட்டும் தோழியாக, தர்மத்தைச் சொல்லும் பாட்டியாக என, வாழ்நாள் முழுவதும் நம்மோடு பயணிக்கின்றவர்கள்தான் பெண்கள்.

தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் மகளிர் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான சர்வதேச மகளிர்தினம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயம், இன்றைக்கு தமிழ்நாடு பெண்களுக்கு துளி கூட பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறியிருப்பது மிகுந்த கவலைக்குரியது. சிறுமி முதல் மூதாட்டி வரை, எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கத் முடியாத ஒரு ஆட்சியாக திமுக உள்ளது.

அன்புச் சகோதரிகளே- உங்களுக்காக, உங்கள் பாதுகாப்புக்காக என்றைக்கும் அதிமுக போராடும். 2026ல் மீண்டும் அஇஅதிமுக ஆட்சி அமைந்ததும், இன்று நீங்கள் அச்சத்துடன் இருக்கின்ற நிலை மாறி, மிகவும் பாதுகாப்புடன், சுதந்திரமாக செயல்பட்டு, பல சாதனைகளைப் புரிகின்ற காலமாக நம் ஆட்சிக்காலம் நிச்சயம் இருக்கும்”! என்று குறிப்பிட்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.