அதிமுகவில் ஒற்றைத் தலைமையை பெரும்பாலான நிர்வாகிகள் விரும்புவதாக நியூஸ் 7 தமிழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் தொடர்பாக மாவட்டச் செயலாளர்களோடு, கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அதில் ஒற்றைத் தலைமை விவாதமும் நடைபெற்றுள்ளது.
கூட்டத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருடன் நம்முடைய முதன்மைச் செய்தியாளர் விக்னேஷ் நடத்திய கலந்துரையாடலை காணலாம்.
அதிமுக இரட்டைத் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக நீங்களே கூறியிருந்தீர்கள்? இப்போது ஒற்றைத் தலைமைக்கு மாற வேண்டிய அவசியம் என்ன?
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கள நிலவரங்களை தலைமைக் கழகத்திற்கு கூறுகிறார்கள். ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. கட்சிக்கு தற்போது ஒற்றைத் தலைமைதான் தேவை என பெரும்பான்மையான மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதற்கு செயல் வடிவம் கொடுப்பது கட்சியினுடைய முடிவு. அதனை வேறு யாரும் சொல்ல முடியாது.
இருபெரும் தலைவர்கள் இருக்கிறார்கள், ஒற்றைத் தலைமை யாரை நோக்கிச் செல்லும், யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது?
அதிக ஆதரவு யார் என்பதை விட ஜனநாயகமுள்ள கட்சியில் ஆரோக்கியமான முறையில் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றது. 4 மணி நேரம் அமைதியான முறையில் கூட்டம் நடைபெற்றது. ஒரு சிறிய தகவல் கூட வெளியே வரவில்லை.
ஒற்றைத் தலைமை அறிவிப்பு பொதுக் குழுவுக்கு முன்பு வருமா? பின்பு வருமா? அல்லது பொதுக்குழுவிலேயே தீர்மானம் நிறைவேற்றப்படுமா?
அனுமானத்தின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்விக்கு பதில் கூற முடியாது. இதுபற்றி கட்சி முடிவு செய்யும்.
உங்களின் ஆதரவு யாருக்கு?
(சிரித்தபடியே) புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா, இரட்டை இலைக்கே என்னுடைய ஆதரவு.
இது தொடர்பான வீடியோவைக் காண – https://www.youtube.com/watch?v=xeJ7VF_lCb0







