நிலத்தை கையகப்படுத்த வந்த அதிகாரிகள் – கற்களை பிடுங்கி வீசிய விவசாயிகள்

பெரியபாளையம் அருகே நடைபெற்று வரும் ஆறு வழிச்சாலை அமைக்கும் பணியை மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும் என்றும் கூடுதலாக விளைநிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   திருவள்ளூர் மாவட்டம்…

பெரியபாளையம் அருகே நடைபெற்று வரும் ஆறு வழிச்சாலை அமைக்கும் பணியை மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும் என்றும் கூடுதலாக விளைநிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள ஆலப்பாக்கம் கிராமத்தில் அதானி துறைமுகத்திற்காக சுமார் 3 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பில் தச்சூர் முதல் சித்தூர் வரை ஆறு வழி சாலை அமைக்கும் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால் நிலத்தை கையகப்படுத்த ஜேசிபி இயந்திரத்துடன் கற்களை நடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த விவசாயிகள் அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். மாற்று பாதையில் சாலை அமைக்க வேண்டும் என்றும் கூடுதலாக இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் ஊத்துகோட்டை நஞ்சை விவசாயிகள் சங்கத்தினர் ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டனர். பின்னர் விளைநிலங்களில் நடப்பட்டிருந்த அளவீட்டு கற்களை பிடுங்கி வீசினர்.

 

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்கிருந்து விவசாயிகளை அப்புறப்படுத்தினர். விவசாயிகள் திடீரென எதிர்ப்பு தெரிவித்ததால், நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.