அமெரிக்காவில் கறுப்பின சமூகத்தில் பிறந்து மிக பெரிய பாடகியாக உலகம் முழுவதும் புகழ்பெற்ற டினா டர்னர் காலமானார். அவருக்கு வயது 83.
பிரபல பாடகி டினா டர்னர், நவம்பர் 26, 1939-ல் அமெரிக்காவில் பிறந்தார். கருப்பினத்தவரான இவர், 1957 இல் பாடகியாக அறிமுகமானார். ராக் அண்ட் ரோல் இசையின் ராணியாகக் கருதப்படும் டினா டர்னர், ஆறு கிராமிய விருதுகளை வென்றுள்ளார்.
டர்னர் ஒரு ஏழை விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதுடன் வாழ்கையில் முன்னேற பல்வேறு தடைகளை எதிர்த்துப் போராடினார். பாடுவதைத் தவிர, நடிகராகவும் நடனக் கலைஞராகவும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் விரும்பப்பட்டவர்.
ராக் அண்ட் ரோல் இசையில் ராணியான இவர், பாடும்போது வித்தியாசமான உடையணிந்தும், வித்தியாசமான முடி அலங்காரத்தோடும் பாடல் உலகில் புரட்சியை ஏற்படுத்தினார். அவரைத் தொடர்ந்து பலரும் அவரின் பாணியில் உடையணிந்து இசை நிகழ்ச்சிகள் படைத்தனர். அவரது வாழ்க்கை முழுவதும் இசை துறையில் ஆதிக்கம் செலுத்தினார்.
பாப் பாடகியாக கலக்கிய இவர் 1990-ல் இருந்து சுவிட்சர்லாந்தில் குஷ்னாத் என்ற இடத்தில் வசித்து வந்தார். இவர் சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற்றவர். சூரிச் நகரில் உள்ள அவரது வீட்டில் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், நேற்று அவர் காலமானார். இவரது மரணத்தை தொடர்ந்து இசைக்கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் அஞ்சலியை செலுத்தினர்.
இவரது மறைவு குறித்து அமெரிக்க முன்னால் அதிபரான பாரக் ஒபாமா, தனது ட்விட்டர் பக்கத்தில், தனது இரங்கலை பகிர்ந்துள்ளனர். அந்த பதிவில், டினா டர்னரின் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.







