கர்நாடகா முதலமைச்சராக பதவியேற்க உள்ள சித்தராமையா, அம்மாநில ஆளுநர் தவார் சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதலமைச்சராக சித்தராமையாவையும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரையும் கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. இதனையடுத்து பெங்களூருவில் நடைபெற்ற அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக சித்தராமையா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து ஆளுநர் மாளிகைக்கு சென்ற சித்தராமையா, கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆளுநருடனான சந்திப்பின்போது டி.கே.சிவக்குமார் மற்றும் அமைச்சர்களாக பதவியேற்க உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள் : எவ்வளவு தூரம் பறந்தாலும் அந்த காருக்கு மட்டும் ஒன்னும் ஆகாது போல!! – ‘ஃபாஸ்ட் எக்ஸ்’ விமர்சனம்
கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா நாளை மறுநாள் பெங்களூருவில் பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், பதவியேற்பு விழாவில் பங்கேற்க, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். இதனை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் நாளை இரவு விமானம் மூலம் பெங்களூரு செல்ல உள்ளார். இதன் காரணமாக, வரும் 20 ஆம் தேதி நடைபெற உள்ள திமுகவின் உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் தள்ளிவைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.







