எவ்வளவு தூரம் பறந்தாலும் அந்த காருக்கு மட்டும் ஒன்னும் ஆகாது போல!! – ‘ஃபாஸ்ட் எக்ஸ்’ விமர்சனம்

வின் டீசல் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஃபாஸ்ட் எக்ஸ் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ் வரிசையில் இந்த படமும் வெளியாகியுள்ளது. இதுவரை வெளியான பாகங்கள் அனைத்தும் மிகப்பெரிய…

வின் டீசல் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஃபாஸ்ட் எக்ஸ் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ் வரிசையில் இந்த படமும் வெளியாகியுள்ளது. இதுவரை வெளியான பாகங்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவிற்கு வசூல் செய்து சாதனைகள் படைத்தது. அந்த வரிசையில் ஃபாஸ்ட் எக்ஸ் திரைப்படம் அதிக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபாஸ்ட் எக்ஸ் திரைப்படத்தில் வின் டீசல், ஜேசன் மோமோவா, ஜான் சீனா, ஜேசன் ஸ்டேதம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். எத்தனை ஹீரோ, எத்தனை ஹீரோயின் என எண்ணிப்பார்க்கும் அளவுக்கு அடுத்தடுத்து பல நட்சத்திரங்கள் சர்ப்ரைசாக வந்து செல்கின்றனர். டாம் டொரேட்டோவாக வின் டீசல் இந்த படத்திலும் நடித்துள்ளார். கேம் ஆஃப் த்ரோன்ஸ், ஆக்வாமேன் படங்களில் நடித்த ஜேசன் மோமோவா இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

டாமின் குடும்பத்தையே அழிக்க நினைக்கும் ஜேசன் மோமோவா அதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார். வெறி பிடித்த மிருகம் போல வேட்டையாட தொடங்கும் ஜேசன் மோமோவாவை டாம் எப்படி தடுக்கிறார், தனது குடும்பத்தை காப்பாற்றினாரா இல்லையா என்பது தான் ஃபாஸ்ட் எக்ஸ் படத்தின் கதை.

வின் டீசலின் நடிப்பு இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ். ஆக்ஷன், சென்டிமென்ட், லவ் என எல்லாவற்றிலும் அசத்தியுள்ளார். அதிலும் கார் சேசிங் காட்சிகள் வேற லெவல். முதல் பாகத்தில் பார்த்தது போலவே அதே எனர்ஜி உடன் இந்த படத்திலும் நடித்துள்ளார். வின் டீசல் நடிப்புக்கு ஈடு கொடுக்கும் வகையில் வில்லனாக நடித்துள்ள ஜேசன் மோமோவா டஃப் கொடுத்துள்ளார். கிறுக்குத்தனத்திலும் சரி, வில்லத்தனத்திலும் சரி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசர வைத்துள்ளார். அதே போல ஜான் சீனா ஜாலியான அதே நேரத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

ஃபாஸ்ட் 9 பாகத்தை ஒப்பிடும் போது இந்த பாகம் மிக பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை ஏராளமான சேசிங் மற்றும் சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சென்டிமென்ட் காட்சிகள், தந்தை மகன் உறவு, துரோகம் என திரைக்கதையும் போர் அடிக்காமல் செல்கிறது.

குறிப்பாக வின் டீசல் பயன்படுத்தும் கார் எவ்வளவு தூரம் பறந்தாலும் அந்த காருக்கு மட்டும் ஒன்னும் ஆகாமல் இருப்பது போன்ற சில காட்சிகள் இருந்தாலும், அது நம்மை ரசிக்க வைக்கிறது. சண்டை காட்சிகள் நம்மை சீட்டின் நுனிக்கு இழுத்துச் செல்லும் வகையில் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வொண்டர் உமன் கால் கடோட், ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் சீரிஸின் தொடக்க பாகங்களில் நடித்திருப்பார். அவர் இந்த பாகத்தில் மீண்டும் எண்டிரி கொடுத்துள்ளார். பிரை லார்சன், மிட்செல் ரோட்ரிகோஸ் என ஏராளமான ஹீரோயின்களும் எண்டிரி கொடுத்துள்ளது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. இது போலவே பல சர்ப்ரைஸ் என்ட்ரிகளும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. இயக்குனர் லூயிஸ் லெட்டர் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்தி ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

மொத்தத்தில் ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ் வரிசையில் மீண்டும் ஒரு வெற்றிப்படமாக ஃபாஸ்ட் எக்ஸ் உருவாகியுள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

  • தினேஷ் உதய்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.