3 ஆண்டுகளுக்கு முன் இரண்டு பச்சிளங் குழந்தைங்களை கொலை செய்த வழக்கில் தாயும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நொச்சிக்குளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிறந்து 5 நாட்களான பச்சிளங்குழந்தை ஒன்று குளத்தில் சடலமாக கிடந்தது. இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சங்கரன்கோவில் அருகே உள்ள நொச்சிகுளத்தை சேர்ந்தவர் முத்துமாரி, மாடசாமி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் ஆண் குழந்தையும் உள்ளன. கருத்து வேறுபாடு காரணமாக முத்துமாரியை பிறிந்த மாடசாமி, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு சென்னையில் வசித்து வருகிறார்.
கணவன் விட்டுச் சென்ற நிலையில் தன் குழந்தைகளுடன் வசித்து வந்த முத்துமாரிக்கு வடநத்தம்பட்டியைச் சேர்ந்த சசிக்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு இவர்களுக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த விசயம் வெளியே தெரியக்கூடாது என எண்ணிய இருவரும் பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை குளத்தில் வீசி கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.
நான்கு ஆண்டுகளாக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த முத்துமாரியும், சசிகுமாரும் கடந்த 27 ஆம் தேதி பிடிபட்டனர். சேர்ந்தமரம் காவல்நிலையத்தில் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல கொடூர சம்பவங்கள் அரங்கேறியது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் முத்துமாரியின் குற்றங்கள் அம்பலமானதை அடுத்து அவர் தன்னை விட்டுவிடும் படி காவல்துறையினரின் காலில் விழுந்து அழும் சம்பவமும் அரங்கேறியது.
முத்துமாரியும் சசிக்குமாரும் 2018 ஆம் ஆண்டு ஒரு குழந்தையை பெற்றெடுத்து குளத்தில் வீசியும், 2019 ஆம் ஆண்டு பிறந்து 3 நாட்களே ஆன குழந்தையை வீட்டின் அருகே உயிரோடு புதைத்துள்ளனர். காவல்துறையினர் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் இன்று அந்தக் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை தோண்டினர். புதைத்து 3 ஆண்டுகள் ஆனதால் உடல் மக்கி எலும்பு கூடு மட்டுமே இருந்தது. குழந்தையின் எலும்புக் கூடுகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
பச்சிளங்குழந்தைகள் என்று கூட பாராமல் இரு குழந்தைகளை பெற்றவர்களே கொலை செய்த கொடூர சம்பவம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.









