மணிப்பூரின் சண்டேல் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களில் சந்தேகத்துக்குரிய மதுபானம் அருந்தியதால் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 150 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சண்டேல் மாவட்டத் தலைமையகத்தைச் சேர்ந்த சுமில் லாங்ஹு, செய்தியாளர்களிடம் நவம்பர் 20 – வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஷிஜா மருத்துவமனையில் சுமார் 150 பேர் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், பபினா மருத்துவமனையிலும் பலர் இதே பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மதுபானம் காரணமா?
கடந்த இரண்டு முதல் மூன்று நாட்களாக இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட சுமில் லாங்ஹு, பாதிக்கப்பட்டவர்கள் மதுபானம் அருந்தியதே இதற்குக் காரணம் எனத் தகவல்கள் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். இருப்பினும், அந்த மதுபானம் எங்கிருந்து பெறப்பட்டது என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, உயிரிழந்தவர்கள் அருந்தியதாகக் கூறப்படும் மதுபானம், காக்சிங் மாவட்டத்தில் உள்ள சுக்னு பகுதியில் இருந்து வாங்கப்பட்டதாக சண்டேல் மாவட்டக் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சண்டேல் மாவட்டத்தில் உள்ளூரில் மதுபானம் தயாரிக்கப்படுவதாகத் தெரியவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுபானம் அருந்த வேண்டாம் என எச்சரிக்கை!
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நவம்பர் 19 – வியாழக்கிழமை சண்டேல் மாவட்ட ஆட்சியர் பொது சுகாதார எச்சரிக்கையை வெளியிட்டார். அதில், உள்ளூரில் தயாரிக்கப்படும் மதுபானங்கள் மற்றும் அவற்றின் தயாரிப்பு முறை குறித்து சந்தேகம் உள்ள மதுபானங்களை அருந்த வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மதுபானம் அருந்திய பிறகு வாந்தி, வயிற்று வலி, தலைவலி, தலைச்சுற்றல், பார்வை மங்குதல் அல்லது மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் முதல்வர் ஆய்வு!
இதற்கிடையே, மணிப்பூர் முதலமைச்சர் யும்னம் கேம்சந்த் சிங், இம்பால் மேற்கு பகுதியில் உள்ள ஷிஜா மருத்துவமனை மற்றும் இம்பால் கிழக்கு பகுதியில் உள்ள பபினா மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களையும் மருத்துவக் குழுவினரையும் சந்தித்து நிலைமையை ஆய்வு செய்தார். இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும், இதற்குக் காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.





