ராஜஸ்தானில் உள்ளாட்சியை கைப்பற்றிய காங்கிறஸ் : மக்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்காந்தி!

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேதலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து மக்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் முழுவதும் கடந்த மாதம் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில் மாநிலம் முழுவதும் பாஜகவை முந்தி, காங்கிரஸ் கட்சி 7,352 அறிவிக்கப்பட்ட பஞ்சாயத்து சமிதி இடங்களில் 3,684 இடங்களையும், 911 மாவட்டப் பரிஷத் இடங்களில் 548 இடங்களையும் கைப்பற்றியது. இந்த இரு நிலைகளிலும் பாஜக முறையே 1,521 மற்றும் 262 இடங்கள் வித்தியாசத்தில் காங்கிரஸை விட பின்தங்கியுள்ளது.

இந்த நிலையில் ராஜஸ்தான் மக்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “ராஜஸ்தானின் கிராமப்புற சகோதர, சகோதரிகளுக்கு மனமார்ந்த நன்றி.

பஞ்சாயத்துத் தேர்தலில் காங்கிரஸ் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கை, இனி எங்களது பொறுப்பு.

இந்த செய்தி நேரடியாக “டபுள் எஞ்சின்” அரசாங்கத்திற்கு, பாஜகவின் சொந்த ஆட்சி நடக்கும் மாநிலத்திலிருந்து வந்துள்ளது.

பாஜக அரசு, MGNREGA திட்டத்தின் மீது நடத்திய தாக்குதல் விவசாயிகளை நஷ்டத்தில் தள்ளியது. பஞ்சாயத்துகளின் உரிமைகளைப் பறித்தது.

விலைவாசி உயர்வு, வேலையின்மை மற்றும் இடம்பெயர்வு ஆகியவை கிராமங்களை வெறிச்சோடச் செய்துவிட்டன.

கிராமங்கள், நடப்பவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தன, பொறுத்துக்கொண்டிருந்தன. இப்போது அவை பேசிவிட்டன.

இது வெறும் ராஜஸ்தானின் மக்கள் தீர்ப்பு மட்டுமல்ல — நாட்டின் ஒவ்வொரு கிராமத்தின் குரல்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.