இந்திய பிரதமர் மோடி மேற்காசியாவில் நடைபெற்று வரும் போர் குறித்து இன்று மாநிலங்களவையில் பேசினார். அவர் பேசியதாவது ;
“மேற்கு ஆசியாவில் நேர்ந்துவரும் போர் நம் அனைவரையும் பாதித்துள்ளது. இந்த போரில் அரசின் நிலைப்பாடு குறித்து அவை முன்பும் மக்கள் முன்பும் தெரிவிக்க வேண்டியது அவசியம்.
ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் மூன்று வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரால் உலகில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வணிக வழித்தடங்களை இப்போர் கடுமையாக பாதித்துள்ளது. இந்த வழித்தடத்தில் கிடைக்கக்கூடிய எரிபொருள், டீசல், பெட்ரோல், உரங்கள் போன்றவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நாட்டிற்காக 65 லட்சத்திற்கும் அதிகமான மெட்ரிக் டன் எரிவாயுவை ஏற்பாடு செய்யும் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது. இந்தியாவிடம் தேவையான அளவு கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. தடையற்ற விநியோக ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
போர் தொடங்கியதில் இருந்து ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து கடும் சவாலானதாக மாறியுள்ளது. இத்தகைய பாதகமான சூழலிலும் பேச்சுவார்த்தைகளின் மூலம் சுமூகமான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.” எனக் குறிப்பிட்டார்.
முன்னதாக நேற்று மக்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி மேற்காசியாவில் நடைபெற்று வரும் போரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பேசினார் என்பது குறிப்படத்தக்கது.







