தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென அறிவித்தார். மேலும் இனிமேல் எந்த தேர்தலிலும் தான் போட்டியிடப் போவது இல்லை என்றும், கூடுதல் பொறுப்புகளையும் இனி ஏற்காமல் அரசியல் மற்றும் சமூக பணிகளில் மட்டுமே ஈடுபட போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள மூத்த அரசியல் தலைவர்களுள் முக்கியமானவர் சரத்பவார், 1958-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர். பின்னர் நீண்ட நெடிய பயணத்திற்கு பிறகு கடந்த 1999ம் ஆண்டு காங்கிரசில் இருந்து பிரிந்து பிஏ சங்மா உள்ளிட்டோருடன் இணைந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அக்கட்சி துவங்கியது முதலே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வந்த சரத்பவார், மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சராக 4 முறை பதவி
வகித்துள்ளார். இது தவிர மத்தியிலும் பலமுறை அமைச்சராக பதவி வகித்துள்ள இவர் தனது அரசியல் வாழக்கையில் அத்தனை உச்சங்களையும் வீழ்ச்சிகளையும் எதிர்கொண்டிருக்கிறார்.
மேலும் பல தேர்தல்களில் பல முக்கிய கூட்டணிகளை உருவாக்கியதில் முக்கியமான ஒருவராக இருந்துள்ள சரத்பவார், சமீபத்திய மகாராஷ்டிர மாநில தேர்தலின் போதும் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி உருவாக முக்கிய பங்கு வகித்தார்.
இந்நிலையில், சமீபகாலமாக சரத்பவார் மீது அவரது அண்ணன் மகன் அஜித் பவார் அதிருப்தியில் இருப்பதாக மகாராஷ்டிர மாநில அரசியலில் பேச்சு அடிபட்டது. ஏனெனில், சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக தனது மகள் சுப்ரியா சுலேவை விரைவில் கொண்டுவர இருப்பதாகவும், இதனால் தான் ஓரங்கப்பட வாய்ப்புள்ளதாக அஜித் பவார் கருதுகிறார் என கூறப்பட்டது. எனவே சில எம்.எல்.ஏக்களை பிரித்து சென்று கட்சியை உடைத்து விடுவார் என்றும், ஆளும் பாஜகவுடன் இணைந்து விடுவார் எனக் கூறப்பட்டு வந்த சூழலில், இதனை அஜித் பவார் முழுவதுமாக மறுத்திருந்தார்.
இந்நிலையில், இன்று சரத்பவார் எழுதிய ‘லோக் மாஜே சங்கதி’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது ஒரு அறிவிப்பினை வெளியிட்டார், அதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து தான் விலகுவதாகவும், இனிமேல் தேர்தலில் போட்டியிட மாட்டேன், அரசியல், சமூக பணிகளில் மட்டுமே ஈடுபடுவேன் எனவும் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பு தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதோடு, மகாராஷ்டிர மாநில அரசியலிலும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா









