நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் பல புதுமையான நிகழ்ச்சியை கொண்டுவந்ததில் ஷண்முகத்தின் பங்கு அளப்பரியது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
நியூஸ் 7 தமிழ் தொடங்கப்பட்ட நாள்முதல், நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவராக ஷண்முகம் பணியாற்றி வந்தார். நியூஸ் 7 தமிழின் பேசும் தலைமை, பீனிக்ஸ் மனிதர்கள் போன்ற வெற்றிகரமாக நிகழ்ச்சிகளை கொண்டுவந்தார். தனித்த குரல் வளத்தால் தனக்கென ஊடக உலகில் தனி இடம் பிடித்த அவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று ஷண்முகம் காலமானார். அவரது மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த ஊடகவியலாளர் ஷண்முகத்தின் உடலுக்கு சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு, கண்ணிகாபுரத்தில் உள்ள இடுகாட்டில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதனிடையே, ஷண்முகம் மறைவிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில், ஷண்முகம் உடல்நலக்குறைவால் காலமானதையறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் என குறிப்பிட்டுள்ளார். நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் பல புதுமையான நிகழ்ச்சியை கொண்டு வந்ததில் இவரது பங்கு அளப்பரியது. ஷண்முகத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-இரா.நம்பிராஜன்








