ராணி இரண்டாம் எலிசபெத் ஆஸ்திரேலியாவுக்கு சென்றபோது எழுதிய கடிதம் ஒன்று 2085-ம் ஆண்டில்தான் படிக்க வேண்டும் என அவரே கைப்பட எழுதி கொடுத்துள்ளதால் கடிதம் குறித்து மர்மம் நீடிக்கிறது.
இங்கிலாந்தின் நீண்டகால அரசியாக இருந்த இரண்டாம் எலிசபெத் மகாராணி உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பிலிருந்த நிலையில், கடந்த 8-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.
ராணி எலிசபெத்தின் மறைவையொட்டி இந்தியாவில் இன்று ஒருநாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி, இன்று (செப்டம்பர் 11ஆம் தேதி) நாடு முழுவதும் அரசு துக்கம் அனுசரிக்கப்பட்டு, தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. மேலும், அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், ராணி எலிசபெத் எழுதிய கடிதம் ஒன்று ஆஸ்திரிலேயாவில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ராணி விக்டோரியா கட்டடத்தில் ரகசியமாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை அடுத்த 63 ஆண்டுகளுக்கு பிரிக்க கூடாது என்ற உத்தரவும் கடைபிடிக்கப்படுகிறது.
கடிதத்தில் எழுதியுள்ள விஷயங்களை பொதுமக்களுக்கு எப்போது வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னியின் மேயருக்கு ராணி தன் கைப்பட எழுதிய அந்த கடிதத்தில், “வாழ்த்துக்கள். கி.பி. 2085 ஆம் ஆண்டில் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பொருத்தமான நாளில், தயவுசெய்து இந்த உறையைத் திறந்து சிட்னியின் குடிமக்களுக்கு எனது செய்தியை தெரிவிப்பீர்களா?” என்று எழுதப்பட்டு இருக்கிறது.
விக்டோரியா மகாராணியின் வைரவிழாவை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக 1898ஆம் ஆண்டில் பெட்டகம் வைக்கப்பட்டுள்ள கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. இதன் பின்னர் அந்த கட்டடம் திறக்கவில்லை. மேலும் ராணி எலிசபெத்தின் உத்தரவு பின்பற்றப்படுவதால், அடுத்த 63 ஆண்டுகளுக்கு அந்த கடிதத்தில் என்ன இருக்கிறது என்பது மர்மமாகவே இருக்கும்.
-யுதி







