தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்மின்டன் வீரர் ஷங்கர் முத்துசாமி ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்காகத் தங்கம் வெல்ல வேண்டும் எனத் தமிழ்நாடு பேட்மின்டன் சங்கத்தின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்மின்டன் வீரர் ஷங்கர் முத்துசாமி உலக ஜூனியர் பேட்மின்டன் தரவரிசையில் முதலிடம் பிடித்ததை அடுத்து அவருக்குப் பாராட்டு விழா சென்னை டிடிகே சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு பேட்மின்டன் சங்கத்தின் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், தமிழ்நாடு பேட்மின்டன் சங்கத்தின் தலைவர் அன்புமணி ராமதாஸ், பொதுச்செயலாளர் அருணாச்சலம், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், பேசிய பேட்மின்டன் சங்கத்தின் தலைவர் அன்புமணி ராமதாஸ், ஷங்கர் முத்துசாமி இப்போது ஜூனியர் உலக தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். என்னைப் பொறுத்தவரை இது போதாது, கிராமத்தில் உள்ள பிள்ளைகளை ஊக்குவித்து, அவர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தி, விளையாட வைக்க வேண்டும் எனக் கூறினார். மேலும், வெளிப்படையான ஒரு முறை வேண்டும் என்பதால் தான், மென்பொருள் ஒன்றை உருவாக்கி உள்ளோம் எனத் தெரிவித்த அவர், யார் நினைத்தாலும் அதில் எந்த விதமான விதி மீறல்களையும் செய்ய முடியாது எனக் கூறினார்.
அண்மைச் செய்தி: ‘படப்பிடிப்பில் விபத்து; நடிகர் நாசர் மருத்துவமனையில் அனுமதி!’
தொடர்ந்து பேசிய அவர், நேர்மையாக வந்த வீரர் தான் ஷங்கர் எனவும், என்னுடைய நோக்கம், ஷங்கர் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்காகத் தங்கம் வெல்ல வேண்டும் எனக் கூறினார். மேலும், ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தொடரில் கண்டிப்பாகத் தங்கம் வெல்ல வேண்டும் எனக் கூறிய அவர், ஷங்கரின் தாய், தந்தையை வெகுவாக பாராட்டுவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், தாய் தந்தையரின் ஈடுபாடு இதில் இல்லையென்றால் இன்று ஷங்கர் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது எனத் தெரிவித்த அவர், ஷங்கருக்கு இந்த விழா நடத்துவது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது எனவும், சமீபத்தில் நடத்தப்பட்ட செஸ் ஒலிம்பியாட் ஒரு சிறந்த நிகழ்வாகத் தமிழ்நாடு அரசின் மூலம் நடத்தப்பட்டு முடிந்திருக்கிறது. கிரிக்கெட் அல்லாத விளையாட்டுகளில், மிகுந்த வளர்ச்சி அடைந்து வரும் விளையாட்டு என்றால் அது பேட்மின்டன் தான் எனக் கூறினார்.








