தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் – தமிழக அரசு உத்தரவு!!

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவாலை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக சைலேந்திர பாபுவை தமிழ்நாடு அரசு நியமித்தது. இந்நிலையில் தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபுவின் பதவிக்காலம்…

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவாலை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக சைலேந்திர பாபுவை தமிழ்நாடு அரசு நியமித்தது. இந்நிலையில் தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபுவின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடையவுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி.யாக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்த நிலையில், புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள யு.பி.எஸ்.சி. தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூன் 22 ஆம் தேதி நடைபெற்றது.

அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறைச் செயலாளர் அமுதா, டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல, மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய மற்றும் உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

இதையும் படியுங்கள் : பெங்களூரில் எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனை கூட்டம் – சரத்பவார் அறிவிப்பு

பணி மூப்பு அடிப்படையில் டிஜிபி அந்தஸ்தில் 13 அதிகாரிகள் இருந்ததால், தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. இந்நிலையில் இன்று சென்னை பெருநகர காவல் ஆணையராக உள்ள சங்கர் ஜிவாலை, தமிழ்நாட்டின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக நியமித்து தமிழ்நாடு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் சென்னை பெருநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.