எல்.கே.ஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் – கைது

திருப்பூரில் எல்.கே.ஜி. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி பேருந்து உதவியாளர் கைது. திருப்பூர் குருவாயூரப்பன்நகரைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவர், அதே பகுதியில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் நடத்தி வரும் தனியார்…

திருப்பூரில் எல்.கே.ஜி. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி பேருந்து
உதவியாளர் கைது.

திருப்பூர் குருவாயூரப்பன்நகரைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவர், அதே பகுதியில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் நடத்தி வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 16-ந் தேதி சிறுமியை அவரது தாயார் குளிக்க வைத்தார். அப்போது சிறுமியின் உடலில் ரத்தம் கட்டியது போல, காயம் இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடையந்த அவர், உடனே சிறுமியை பாண்டியன்நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். தொடர்ந்து டாக்டர்கள் சிறுமியை பரிசோதித்து விட்டு, சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளானதாகவும், இது தொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கும் படியும் அறிவுறுத்தினர்.

இது குறித்து சிறுமியின் தாயார் திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 16ம் தேதி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே இந்த சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பூலுவப்பட்டி சிக்னல் அருகே, கடந்த 17-ந் தேதி நள்ளிரவு வரை சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த பகுதிக்கு போலீஸ் கமிஷனர் வனிதா மற்றும் ஆர்.டி.ஓ ஜெகநாதன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் பொதுமக்களின் போராட்டம் ஏற்படுத்திய அதிர்வலையால் இந்த வழக்கின் விசாரணை மிகத் தீவிரமாக நடந்தது. இதையடுத்து, பள்ளியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், சிறுமியிடம் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், பஸ் டிரைவர்கள், பஸ் உதவியாளர்கள் என அனைவரையும் வரவழைக்கப்பட்டு அடையாளம் காண்பிக்கும்படி தெரிவிக்கப்பட்டது. இதில் சிறுமி ஒருவரை அடையாளம் காண்பித்தார். இதனைத்தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (39) என்பதும், பஸ்சின் உதவியாளர் என்பதும், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சதீஷ்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.