விழுப்புரத்தில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
விழுப்புரத்தில் இருந்து கோனூர் என்ற ஊருக்கு தடம் எண் 27 என்ற எண் கொண்ட அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. விழுப்புரத்தில் இருந்து கல்லூரி மாணவி உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
பேருந்தில் நடத்துநர் சிலம்பரசன் என்பவரும், ஓட்டுனராக அன்புச்செல்வன் என்பவரும் பணியில் இருந்தனர். இந்த நிலையில் விழுப்புரத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரம் பயணம் செய்த பயணிகள் அனைவரும்
பெரும்பாக்கம் என்கிற கிராமத்தில் அனைத்து பயணிகளும் இறங்கிய பிறகு, சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் 20 வயது மாணவி ஒருவர் மட்டும் தனியாக பயணித்துள்ளார். அப்போது நடத்துனர் சிலம்பரசன் அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் ஓட்டுநராக இருந்த அன்புச் செல்வன் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஊருக்கு வந்த அந்த மாணவி இதுபற்றி பெற்றோரிடம் தெரிவித்தார். காணை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து போலீசார், நடத்துனர் சிலம்பரசனை கைது செய்தனர். நடத்துனரின் இந்த செயலுக்கு உடந்தையாக இருந்த பேருந்து ஓட்டுனர் அன்புச்செல்வனையும் கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்துத்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த செயல், போக்குவரத்து கழகத்திற்கு மாபெரும் தலை குனிவையும், கலங்கத்தையும் ஏற்படுத்தியதோடு, போக்குவரத்து கழக வரலாற்றில் இது ஒரு கருப்பு நிகழ்வு என்றும் வரும் காலங்களில் பணியாளர்கள் இதுப்போன்ற செயலில் ஈடுபட கூடாது என்றும் ஈடுபடும் பணியாளர்கள் நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.








