கோவை அரசு கலைக்கல்லூரியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட பேராசிரியரை 4 பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை அரசு கலைக்கல்லூரியில் பிபிஏ துறையின் தலைமை பேராசிரியராக பணியாற்றி வரும் ரகுநாதன் என்பவர், மாணவிகளிடம் பாலியல் ரீதியாக பேசுவதாகவும், சீண்டலில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்தது.
இதுகுறித்து கடந்த 16-ஆம் தேதியே கல்லூரி முதல்வரிடம் மாணவிகள் புகாரளித்த போதிலும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவர் அமைப்பினருடன் இணைந்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு, புகாருக்குள்ளான பேராசிரியரிடம் விசாரணை நடத்தியது.
துறைரீதியான நடவடிக்கையுடன் சட்டப்பூர்வு நடவடிக்கை எடுக்கவும் மாணவர்கள் வலியுறுத்தியதால், பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து பேராசிரியர் ரகுநாதனை கைது செய்த போலீசார், அவர் மீது மானபங்கப்படுத்துதல், கடத்தல், கொலை மிரட்டல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.








