பிரபல பின்னணி பாடகியின் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, மதபோதகர் மற்றும் பாடகியின் உறவினர்கள் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகி ஒருவர், அவரது மகளை, சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது தங்கையின் வீட்டில் தங்க வைத்துள்ளார். அப்போது, அந்த சிறுமிக்கு தங்கையின் கணவரும், மற்றொரு உறவினரும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாடகியின் தங்கை, கீழ்பாக்கத்தில் உள்ள தேவாலயத்திற்கு செல்லும் போது சிறுமியையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு, மதபோதகர் ஹென்றி பால் என்பவரும் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி, தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, மதபோதகர் ஹென்றிபால், பாடகியின் தங்கை, அவரது கணவர் மற்றும் ஒரு உறவினர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 4 பேரும் திடீரென தலைமறைவான நிலையில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.







