கோவை மாணவி உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை கோட்டைமேடு பகுதியில் வசித்து வந்த 17 வயது மாணவி, ஆசிரியரின் பாலியல் தொல்லையால் உயிரிழப்பு செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாணவி எழுதி வைத்த கடிதம் மற்றும் செல்போனையும் கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வந்தனர். அந்த கடிதத்தில், “யாரையும் சும்மா விடக்கூடாது. ரீத்தா ஓட தாத்தா, எலிசா சாரோட அப்பா, இந்த சார், யாரையும் விடக் கூடாது” என்று குறிப்பிட்டிருந்தார்.
விசாரணையில் மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்துவந்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மாணவியின் உயிரிழப்பு க்குக் காரணமான பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாணவியின் வீட்டின் முன்பு சக மாணவர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, மாணவி உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக, பள்ளி முதல்வர் மீரா ஜான்சன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள மீரா ஜாக்சனை கைது செய்வதற்காக, கோவை மாநகர காவல்துறை சார்பில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.







