ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்தை ரத்து செய்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடைவிதித்து 2020ம் ஆண்டு நவம்பர் 21ம்…

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்தை ரத்து செய்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடைவிதித்து 2020ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, போதுமான காரணங்களை விளக்காமல் தடை சட்டம் இயற்றப்பட்டுள்ளது. உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது என தெரிவித்தது. மேலும், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. அதில், உரிய முறையில் ஆராயாமல் சென்னை உயர்நீதிமன்றம் சட்டத்தை ரத்து செய்துள்ளது. எனவே, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.