திமுக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பெருமளவு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை பார்வையிட்ட முதலமைச்சர், மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். தொடர்ந்து, மன்னார்குடி அருகே ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “ஆட்சிக்கு வந்தவுடன் டெல்டா மாவட்டங்களில் நீர்நிலைகள் தூர் வாரப்பட்டது. இதனால் மழைநீர் பெருமளவில் தேங்காமல் தடுக்கப்பட்டது. கடந்த 4 மாதங்களில் ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. திமுக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பெருமளவு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
அதிமுக அரசு செயல்பட்ட விதத்தை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், தமிழ்நாடு அரசு நிரந்தர தீர்வை எடுத்து வருகிறது. சென்னை பெருநகர வெள்ள மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு புவியியல் அமைப்பு தொடர்பான ஆய்வு செய்து அறிக்கை தரும். டெல்டா மாவட்டங்களில் வெள்ள தடுப்பைத் தடுக்க நிரந்தர தீர்வு எடுக்கப்படும் என்று கூறினார்.
அமைச்சர்கள் தலைமையில் கிராமம் வாரியாக பயிர்சேதம் குறித்து முழுவதுமாக கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டுள்ளதாகவும், கணக்கெடுப்பு பணி முடிவடைந்தவுடன் உரிய இழப்பீடு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்ட முதலமைச்சர், பயிர் காப்பீடு நீட்டிப்பு தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து எந்தவித பதிலும் இதுவரை வரவில்லை என்றும் தனது பேட்டியில் கூறினார்.








