வண்டலூர் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: அப்படிபட்ட சம்பவம் நடைபெறவில்லை என காவல்துறை விளக்கம்!

வண்டலூர் அருகில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் அதுபோன்ற சம்பவம் நடைபெற வில்லை என காவல்துறை விளக்கமளித்துள்ளது.

இன்று காலை வண்டலூர் அருகே கண்டிகை அரசு பள்ளியில் பள்ளிக்குச்சென்ற மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து இச்சமபவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்தநிலையில் அரசு பள்ளியில் அத்தகைய சம்பவம் நடைபெற்றது என்பதை உறுதிப்படுத்தும் எந்தவொரு ஆதாரமும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பில் கூறியிருபதாவது, “ 24.09.2026 அன்று, தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட கண்டிகை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் குழந்தை பாலியல் துன்புறுத்தல் தொடர்பானதாகக் கூறப்படும் ஒரு சம்பவம் குறித்து புகார் பெறப்பட்டது. புகார் கிடைத்த உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு, மூத்த பெண் காவல் அதிகாரிகளின் மேற்பார்வையில், பெண் காவல் ஆய்வாளர் மூலம் துரிதமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையின் போது, தொடர்புடைய அனைத்து ஆதாரங்களும் உடனடியாக சேகரிக்கப்பட்டு, கவனமாக சரிபார்க்கப்பட்டன. பள்ளி வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கப்பெற்ற கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும், இவ்விவகாரத்துடன் தொடர்புடைய சாட்சிகளிடம் விரிவாக விசாரணை நடத்தப்பட்டது. கிடைக்கப்பெற்ற பிற அறிவியல் மற்றும் உறுதிப்படுத்தும் ஆதாரங்களும் கவனமாக ஆய்வு செய்யப்பட்டன.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும், சம்பந்தப்பட்ட குழந்தையின் வாக்குமூலம் மற்றும் சேகரிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும், புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி அரசு பள்ளியில் அத்தகைய சம்பவம் நடைபெற்றது என்பதை உறுதிப்படுத்தும் எந்தவொரு ஆதாரமும் இந்நிலையில் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. எனினும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.