கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் மாசிமக விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய சிவாலயங்களில் ஒன்பது சிவாலயங்களில்
முதன்மையான ஆலயமாக திகழும் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் இன்று மாசிமக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் மாசிமாதத்தில் மாசி மக விழாவும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் மகாமக பெருவிழாவும் நடைபெறும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இன்று ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு ஹோமத்துடன் கொடியேறும் நிககழ்ச்சி நடைபெற்றது. ஆதிகும்பேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகை உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் கொடிகம்பம் அருகே எழுந்தருளி அருள் பாலித்தனர். இதனை தொடர்ந்து கொடி கம்பத்திற்கு பால், சந்தனம், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிவாச்சாரியார்கள் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, நந்தி உருவம் பொறித்த திருக்கொடியினை சிவாச்சாரியார்கள் ஏற்றிவைத்தனர்.
மாசிமக கொடியேற்ற விழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல வியாழ சோமேஸ்வரர் ஆலயம், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர் மற்றும் கெளமேஸ்வரர் ஆலயம் ஆகிய திருக்கோயில்களிலும் கொடியேற்றம் நடைபெற்றது.