எழுவர் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி ஆளுநர் விரைந்து முடிவெடுப்பார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நீதிபதி மகாதேவன், மாநில மனித உரிமை ஆணைய தலைவர் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய அமைச்சர் ரகுபதி, சட்டக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் புதிதாக கல்லூரிகள் கொண்டுவரப்படும் என்றும் மனித உரிமை பாடத்தை சட்டப்படிப்பில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எழுவர் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு ஆளுநர் விரைந்து முடிவெடுப்பார் என நம்பிக்கை தெரிவித்தார். எழுவரையும் விடுதலை செய்வதே அரசின் நோக்கம் என்றும் ரகுபதி கூறினார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் செய்த காலதாமதத்தை ஏற்க முடியாது என கடும் அதிருப்தியை உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.








