எழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநர் உரிய முடிவை விரைந்து எடுக்க வேண்டுமென திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்யும் முழு அதிகாரம் மாநில ஆளுநருக்கு உண்டு என உச்ச நீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், அவர்கள் இன்றுவரை விடுதலை செய்யப்படவில்லை.
இந்நிலையில், இது தொடர்பாக மதுரையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களை, உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும், 7 பேர் விடுதலை விவகாரத்தில், ஒன்றிய அரசு காலம் தாழ்த்தி வருவதாகவும்,
இது தொடர்பாக, ஆளுநர் உரிய முடிவை விரைவாக எடுக்க வேண்டும் எனவும், 7 பேர் விடுதலை விவகாரத்தில், தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை குறை கூற முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் செய்த காலதாமதத்தை ஏற்க முடியாது என கடும் அதிருப்தியை உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.









