மதுபோதையில் புதுமாப்பிள்ளை தள்ளாடியதையடுத்து, மணப்பெண் எடுத்த அதிரடி முடிவால், கடைசி நேரத்தில் திருமணம் நின்றுபோனது.
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே தொட்டபடகாண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சரவணன். இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவருக்கும் இருவீட்டு பெரியவர்களால் திருமணம் நிச்சயிக்கபட்டிருந்தது. திருமணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் கோலாகலாமாக தொடங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் வஜ்ஜிரபள்ளம் கிராமத்தில் உள்ள ஈஸ்வரன் கோயிலில், காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்தன்று பெண் வீட்டார் மற்றும் உறவினர்கள் கோயிலில் சென்று பார்த்தபோது அதிர்ந்துபோனார்கள். காரணம், அங்கு சம்மந்தபட்ட மாப்பிள்ளை மற்றும் உறவினர்கள் யாரும் கோயிலுக்கு வரவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மணப்பெண் மற்றும் உறவினர்கள் மணமகன் சரவணன், வீட்டிற்கு சென்றுபார்த்தபோது, அங்கு அவர் குடிபோதையில் மயங்கி இருந்ததை பார்த்து மேலும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த குடிகார மணமகனும் வேண்டாம், திருமணமும் வேண்டாம் என்று. திருமணத்திற்கு பெண்வீட்டார் செலவு செய்த தொகையை பெற்று தரக்கோரி பெண்ணின் தாய்மாமன் பாலு மாரண்டஅள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இவ்வளவு ரணகளம் நடந்து கொண்டிருந்ததுகூட தெரியாமல் மதுபோதையில் இருந்த மணமகன் சரவணன், போதை தெளிந்து, இனிமேல் குடிக்க மாட்டேன், பெண்ணை திருமணம் செய்துகொள்ளுகிறேன் என காவல் நிலையத்திலேயே கெஞ்ச தொடங்கினார். இனிமேல் வாய்ப்பில்லை ராஜா என்பதைபோல், இந்த மாப்பிள்ளையும் வேண்டாம், திருமணமும் வேண்டாம் என மணமகள் லட்சுமி ஒரே முடிவாக மறுத்துவிட்டார். இதனால், திருமணம் நின்று போனது. மதுபோதையால் இருந்த மணமகனை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று, மணமகள் எடுத்து இந்த துணிகர முடிவு, உறவினர்கள் மட்டுமின்றி ஊர் மக்களையும் வியக்க வைத்திருக்கிறது.