கனமழை காரணமாக கொடைக்கானலில் உள்ள முக்கிய பிரதான சாலைகள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தில் முக்கிய சுற்றலா தலங்களில் ஒன்றாக கொடைக்கானல் இருந்து வருகிறது. கொடைக்கானலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன.
மேலும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பிரதானமாக பயன்படுத்தும் பாம்பார்புரம் சாலை, நாயுடுபுரம் சாலை, வில்பட்டி போன்ற பெரும்பாலான சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாகவும் மழை நீர் தேங்கிய நிலையிலும் இருப்பதால் வாகனங்கள் விபத்தில் சிக்க அதிகம் வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முக்கிய சுற்றலா தலங்களில் ஒன்றாக உள்ள கொடைக்கானலில், சாலைகள் இவ்வாறாக இருப்பது வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுதும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.








