பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக, குடியரசுத் தலைவர் முடிவை அறிவிக்காதபோது, அதுகுறித்து மாநில அரசு முடிவு எடுக்க முடியாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் விநியோகம் இன்று தொடங்கியது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் 26-ம் தேதி கடைசி நாளாகும். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விண்ணப்பம் விநியோகத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, மாவட்டத்திற்கு ஒரு சட்டக்கல்லூரி அமைக்கப்படும் என்றும், அதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில், தமிழ்நாடு அரசு முடிவெடுத்து, ஆளுநருக்கு அனுப்பியதாகவும், ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பியதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், குடியரசு தலைவர் முடிவை தெரிவிக்காதபோது, அந்த முடிவை தமிழ்நாடு அரசு முடிவெடுக்க முடியாது என்றும், 7 பேர் விடுதலை குறித்து குடியரசுத்தலைவரிடம் முதலமைச்சர் கடிதம் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.







