தலித் கிறிஸ்தவர் தொடர்பான தனி தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளரை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்ததாவது..
” தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிய கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைய பெருமாளுக்கு நினைவரங்கம் ஒன்றை சிதம்பரம் நகரில் அமைக்கப்படும் என்று நேற்று முதல்வர் அறிவித்திருக்கிறார், விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் முதல்வரை சந்தித்து எமது நன்றியை தெரிவித்து இருக்கிறோம்.
நந்தனை மறித்த மண்ணில் பிறந்து, நாடு முழுவதும் பட்டியலின மக்களுக்கான உரிமை வாசலைத் திறந்த பெரியவர் இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டு!
'சம்பந்தி' என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் அன்போடு அழைக்கப்பட்ட அவருக்குச் சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம் அமைத்துப் போற்றுவோம்! pic.twitter.com/UXxLNDuzl8
— M.K.Stalin (@mkstalin) April 18, 2023
ஜவஹர்லால் நேரு அவர்களின் காலத்தில் இருந்து தேசிய அளவில் அரசியலில் ஈடுபாடு கொண்டவர் தேசிய அளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் பழங்குடி மக்களின் வாழ்நிலைகளை ஆய்ந்து இந்திய அரசுக்கு அறிக்கை அளித்தவர். அவருடைய பெயரிலேயே இளையபெருமாள் கமிட்டி நிறுவப்பட்டது.
அந்த பரிந்துரைகளின் அடிப்படையில் தான் வன்கொடுமை தடுப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. என்றைக்கும் அகில இந்திய அளவிட ஒடுக்கப்பட்ட பழங்குடியினரின் பாதுகாப்புக்கு அவர்களின் நலன்களின் மீதான அரசின் திட்டங்களுக்கு இந்த கமிட்டியின் பரிந்துரை மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது.
தேசிய மற்றும் தமிழக அளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், ஒட்டுமொத்த உழைக்கிற மக்களின் நலன்களுக்காகவும் பாடுபட்ட அவருடைய பங்களிப்பை போற்றுகிற வகையிலும் சிதம்பரத்தில் நினைவகம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வருகிற ஜூன் 23ம் தேதி அவருடைய நூற்றாண்டு விழா வருகிறது. அந்த நூற்றாண்டு விழாவையொட்டி நூற்றாண்டு நினைவு அரங்கம் அமைக்க உள்ளதாக முதல்வர் அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
தலித் கிறிஸ்தவர் தொடர்பான தனி தீர்மானம் ஒன்றை சட்டப்பேரவையிலே முதல்வர் முன்மொழிய நிறைவேற்றப்பட இருக்கிறது. நீண்ட காலத்திற்கு பிறகு தலித் கிறிஸ்தவர்களை ஆதிதிராவிட பட்டியல் இனத்தில் இணைப்பதன் மூலம் சட்டபூர்வமான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்கிற வகையில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றி இந்திய அரசுக்கு வலியுறுத்த தமிழ்நாடு அரசு முன் வந்திருக்கிறது.
இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நடவடிக்கை, முதல்வருக்கு எமது நன்றியை தெரிவித்தோம். துணை திட்டங்களுக்கு சட்டம் இயற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம் அதனையும் இந்த நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் முதல்வர் அறிவித்திருக்கிறார்.
அடுத்த கூட்டத்தொடரில் அது சட்டமாக்கப்படும் என்கிற உறுதியும் அளித்திருக்கிறார். இந்த அறிவிப்புகள் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது நம்பிக்கையை தருகிறது, ஆகவே ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் முதல்வரை நேரில் சந்தித்து எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்திருக்கிறோம்.
அத்துடன் மீனவர்கள் இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மெரினா கடற்கரை ஓரத்தில் இருந்து பட்டினப்பாக்கம் அருகிலான லூப் சாலையிலே அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று நள்ளிரவு அவர்களை சந்தித்து நான் பேசினேன் இன்றைக்கு அது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் சட்டப்பேரவையில் எடுக்கப்பட்டு இருக்கிறது.
நீதிமன்றத்திலும் மீனவர்கள் தரப்பு கோரிக்கைகளை வலியுறுத்தக் கூடிய வகையில் அரசு தரப்பில் பேச இருக்கிறோம் என்றும் முதல்வர் கூறியிருக்கிறார். எனவே மீனவர்கள் அதே பகுதியிலேயே மீன் பிடித்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய வகையிலே வியாபாரம் செய்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நம்புகிறோம். இந்த சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சிகரமான சந்திப்பாக அமைந்தது” என திருமாவளவன் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து வேங்கை வயல் விவகாரத்தில் தற்போது வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என செய்தியாளர்கள் எழுப்பப்பட்ட கேள்விக்கு அது குறித்தும் முதலமைச்சரிடம் பேசினோம். விசாரணை நடைபெற்று வருகிறதாக தெரிவித்தார். எனினும் அதற்கு குறித்த காலக்கெடு எதுவும் நாம் நிர்ணயிக்க முடியாது என தெரிவித்தார்







