நடிகர் திலகம் சிவாஜியை போல் முதல் படத்திலேயே கதாநாயகனாகவில்லை எம்ஜிஆர். சின்னஞ்சிறு வேடங்களில் தலைகாட்டி தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி மெல்ல மெல்ல உயர்ந்து கதாநாயகனாக ஆனார் எம்ஜிஆர்.
தான் கஷ்டப்பட்ட நேரங்களில் தனக்கு உதவியவர்களை மறக்காமல் உதவியவர் எம்ஜிஆர். சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடிய போது டி.எஸ் பாலையா தனக்கு செய்த உதவிக்காக பின்னாளில் ஒரு திரைப்பட வாய்ப்பையே விட்டுக்கொடுத்தார் எம்ஜிஆர். திரைப்படங்களில் கூட்டத்தில் ஒருவராக நடித்து வந்த எம்ஜிஆர், மோகினி என்ற திரைப்படத்தில் பாலையாவுடன் நடிக்க இருந்தார், டி எஸ் பாலையாவுக்கான பாத்திரத்தில் தான் நடித்தால் தனது எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என நம்பினார் எம்ஜிஆர். இதற்காக டி.எஸ் பாலையாவை அணுகி தனது யோசனையை கூற பாலையாவும் எம்ஜிஆருக்காக விட்டுக் கொடுத்தார்.
காலச்சக்கரம் சுழன்று ஓடிய நிலையில் கே.ஆர் விஜயா அறிமுகமான கற்பகம் திரைப்படத்தில் முதலில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் எம்ஜிஆர். அதே திரைப்படத்தில் ரங்காராவ் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க டி.எஸ் பாலையாவை சிபாரிசு செய்திருந்தார் எம்ஜிஆர். ஆனால் எம்ஜிஆரின் சிபாரிசை இயக்குநர் கே .எஸ் கோபாலகிருஷ்ணன் ஏற்க மறுக்க, கற்பகம் திரைப்படத்தில் நடிக்க மறுத்து விட்டார் எம்ஜிஆர்..
எம்ஜிஆர் நம்பியார் திரையுலகில் அறிமுகமான காலங்களில் படத்திற்கு இவ்வளவு ஊதியம் என இல்லாமல் மாத சம்பளத்திற்கு நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்கள். இந்த சூழ்நிலையில் அவர்கள் இரு வரும் நடிக்கவிருந்த ஒரு திரைப்படத்தில் எம்ஜிஆரை விட நம்பியாருக்கு அதிக சம்பளம் கொடுப்பதாக தயாரிப்பாளர் – இயக்குநர் பேசிக் கொண்டிருந்தனர் .இதனை அறிந்து எம்ஜிஆர் என்னைவிட உங்களுக்கு அதிக சம்பளம் தர உள்ளார்கள், எனவே நீங்கள் குறைத்து கேட்டு விட வேண்டாம் என நம்பியாரிடம் தெரிவித்தார். ஆனால் நம்பியாரோ அதிக பணம் கேட்டால் நம்மை கழட்டி விட்டு விடுவார்களோ என்ற எண்ணத்தில் மிக குறைந்த தொகைக்கு ஒத்துக்கொண்டார். சில நாட்களில் எம்ஜிஆரை விட நம்பியாருக்கு அதிக தொகை தர இருந்தது உண்மைதான் என்பதை அறிந்த நம்பியார் அதன் பின்னர் எம்ஜிஆர் உடன் தனது நட்பை மேலும் நெருக்கமாக்கி கொண்டார். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்பது திரைப்படங்களில் மட்டுமல்ல,,, வாழ்க்கையிலும்தான்.









