இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் – ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம்

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார். தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி…

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று இரவு 7 மணியளவில் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக செந்தில் பாலாஜியை ஆளுநர் நீக்கியது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அதிகாரம் என்றும், ஆளுநரின் இந்த நடவடிக்கையை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும் தெரிவித்தார். முதலமைச்சரை தொடர்ந்து, திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் செந்தில் பாலாஜியின் பதவி நீக்கத்த்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜி நீக்கம் நிறுத்தி வைப்பு குறித்து முதலமைச்சருக்கு ஆளுநர் 5 பக்க அளவில் எழுதிய கடிதம் வெளியாகியது. அதில் செந்தில் பாலாஜி நீக்கம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எனக்கு அறிவுறுத்தியுள்ளார். அட்டர்னி ஜெனரல் கருத்தையும் கேட்பது சரியானதாக இருக்கும் என்பதால் அவரை அணுகி கருத்து கேட்க உள்ளேன். செந்தில் பாலாஜியின் பதவி நீக்கம் உத்தரவானது, என்னிடமிருந்து அடுத்து தகவல் தெரிவிக்கும் வரை ஒத்திவைக்கப்படுகிறது என்று கூறியிருந்தார் .

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் கடிதம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது ஆளுநர் கடித விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும், சட்ட ரீதியாக எதிர்கொள்வது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர் ரகுபதி, மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ மற்றும் சட்ட வல்லுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் எழுதிய கடிதங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில், ஆளுநர் ஆர்,என்.ரவி கடிதம் எழுதிய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், அமைச்சரை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில், சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கடிதத்தை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.