சாத்தன்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை விசாரிக்கும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி நியமனம் செய்யப்படாததால் வழக்கு விசாரணை தாமதம் ஆவதாக அந்நீதிமன்ற தரப்பில் தகவல்
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும், சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணைக்கு, மேலும் 5 மாத கால நீட்டிப்பு வழங்கி உத்தரவிடக்கோரி அந்நீதிமன்ற தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட நீதிமன்றம் தரப்பில், வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், நீதிபதி பணியிடம் காலியாக உள்ளது. எனவே வழக்கு விசாரணை தாமதமாகிறது என வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனை அடுத்து சிபிஐ தரப்பு வழக்கறிஞர், 2 மருத்துவர்கள், 1 நீதித்துறை நடுவர், இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி அதிகாரி, இந்த வழக்கின் சிபிஐ விசாரணை அதிகாரி மற்றும் 3 தனி நபர்கள் என 8 முக்கிய சாட்சிகளை மட்டும் விசாரிக்க வேண்டியதுள்ளது. இதனால் விசாரணைக்கு 2 முதல் 3 மாதங்கள் கால அவகாசம் தேவைப்படுகிறது என சிபிஐ தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, சாத்தன்குளம் தந்தை மகன் கொலை வழக்கை விசாரிக்கும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி நியமனம் செய்யப்பட்ட நாளில் இருந்து 3 மாதங்களில் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.







