நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் உண்மையிலேயே உதயநிதி ஸ்டாலின் தான் நடித்திருக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
அதிமுக பொன்விழா நிறைவு மற்றும் 51வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் மதுரை டி.எம் கோர்ட் பகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஏழைகள், பெண்கள் படும் கஷ்டங்கள் தெரியாது. அவருக்கு படித்தவர்கள் பணக்காரர்கள் பற்றி மட்டும்தான் தெரியும். அமைச்சர்கள் தரக்குறைவாக பேசி வருகின்றனர் என்று தெரிவித்தார்.
பெண்களுக்கு ரூ.1,000 கொடுப்பதற்கு ஆயிரத்து எட்டு காரணங்கள் சொல்கின்றனர் என்றும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஆனால், நிதியமைச்சர் டான் என்கிறார். நீங்கள் டான் என்றால் நாங்கலாம் சூப்பர் டான். முதலமைச்சரே புலம்பும் அளவுக்கு அமைச்சர்களும், திமுக நிர்வாகிகளும் செயல்பட்டு வருகின்றனர் எனவும் அவர் கூறினார்.
பத்து மாதங்களில் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது என்ற அவர், புதிய போக்குவரத்து விதி அமலுக்கு வந்துள்ளது. இது மாதிரி அபராதம் விதித்தால் ஊழலுக்கு வழிவகுக்கும். இது தவறான முன்னுதாரண சட்டம் என்று சுட்டிக்காட்டினார். விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்தது வருகிறார். உண்மையிலேயே உதயநிதி ஸ்டாலின் தான் அந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று அவர் விமர்சித்தார்.







