முக்கியச் செய்திகள் தமிழகம்

“இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு” – மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் யோசனை

போலி வேலைவாய்ப்பு நிறுவனங்களிடம் ஏமாற்றம் அடைவதை தடுக்க, இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

தனியார் நிறுவன மேற்பார்வையாளர் பணிக்கு நேர்முக தேர்வில் கலந்து கொள்ளும்படி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதனுக்கு 2017ல் வந்த அழைப்பு கடிதம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. விசாரணையில், பொறியியல் பட்டதாரி ஒருவர் தன்னிடம் பணம் பறிக்க முயற்சித்த போலி நிறுவனத்திற்கு நீதிபதியின் முகவரி மற்றும் தொடர்பு எண்ணை கொடுத்துள்ளார். மேலும், இந்த நிறுவனம் 80 பேரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.9.28 லட்சத்தை மோசடி செய்ததாகவும், இது தொடர்பாக சித்ரா எனும் பெண் மட்டும் கைது செய்யப்பட்டதாகவும் சிபிசிஐடி தெரிவித்தது. இதில் தொடர்புடைய பிரதாப் மற்றும் ராஜ் ஆகியோர் தலைமறைவாக உள்ளதால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சித்ரா மீதான வழக்கை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று திருநெல்வேலி நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஊரடங்கு பாதிப்பை சாதகமாக பயன்படுத்தி, சமீபகாலமாக போலி வேலைவாய்ப்பு நிறுவனங்கள் இளைஞர்களை மோசடி செய்வதாக தெரிவித்தனர். இதனால் ஏமாற்றமடைந்த இளைஞர்கள் பலர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாகவும் நீதிபதிகள் கிருபாகரன், வைத்தியநாதன் வேதனை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போலி வேலைவாய்ப்பு நிறுவனங்களிடம் ஏமாற்றம் அடைவதை தடுக்க இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.

Advertisement:
SHARE

Related posts

ரேஷன் கடைகள் திறப்பு குறித்து முதல்வருடன் ஆலோசனை!

திருச்செந்தூர் அருகே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்!

Jeba Arul Robinson

விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி!

Vandhana