“சீமானின் பேச்சு நாகரிகத்தின் எல்லையை மீறி உள்ளது” – திருமாவளவன் எம்.பி. கண்டனம்!

சீமானின் பேச்சு நாகரிகத்தின் எல்லையை மீறி உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

“Seeman's speech has crossed the boundaries of civilization” - Thirumavalavan MP Condemns!

இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில்,

“டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து தொடர் போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்று விசிக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சரை சந்தித்து திட்டத்தை கைவிடக் கோரி பேசினோம். இது மாநில உரிமைகளை பரிப்பது போன்று உள்ளதாக தெரிவித்தோம்.

உயர்கல்வி அனைத்தையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடிய விதிகளை கொண்டுள்ளது. துணைவேந்தர், பேராசிரியர் நியமனம் போன்றவற்றில் மாநில அரசுக்கு எந்த ஒரு அதிகாரம் இல்லை என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது. இதனை விசிக வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக இந்த விதிகளை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்துகிறது..

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். அதற்கு விசிக தீவிரமாக தேர்தல் பணியாற்றும். அண்மைக் காலமாக பெரியார் மீது ஆதாரம் இல்லாத அவதூறுகள் பரப்பப்பட்டு வருகிறது. மொழியின் பெயரால் இனத்தின் பெயரால் அரசியல் செய்யும் கட்சிகள் பெரியாரை இழிவுபடுத்துகிறது. சீமானின் பேச்சு நாகரிகத்தின் எல்லையை மீறி உள்ளது.

அவர் பேச்சு அரசியலுக்கு எதிராக உள்ளது. இந்திய அளவில் பேசப்படும் மதவழி தேசியம் முதன்மையான எதிரியாக இருக்க முடியும். தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் தனது இறுதி மூச்சு வரையில் தீவிரமாக களப்பணி ஆற்றிய பெருமதிப்புக்குரிய தந்தை பெரியாரை கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல. இந்த போக்கை அவர் கைவிட வேண்டும்.

அண்ணாமலை ஆதரிக்கிறார் என்றால் அது அவர் பேசும் அரசியலை குறிக்கிறது. இதனை சீமான் புரிந்து கொள்ள வேண்டும். சீமான் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பெரியார் தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் கொண்டுள்ள அக்கறையினால் அவ்வாறு விமர்சனம் வைத்தார். பெரியார் பேசியதை தவறாக திரித்து பேசுகிறார்கள். தியாகத்தை கொச்சைப்படுத்துகிறார். அது ஏற்புடையதல்ல”

இவ்வாறு திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.