நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாக அறிவித்ததுடன், தமிழக வெற்றிக் கழகம், முதல்வர் விஜய் மற்றும் தவெக அரசின் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
தவெகவிடம் கொள்கைத் திட்டங்கள் இல்லை
தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய சீமான், அக்கட்சியிடம் தெளிவான திட்டங்களோ, கொள்கைகளோ, எதிர்காலத்தை நோக்கிய செயல்திட்டங்களோ இல்லை என்று விமர்சித்தார். மேலும், தமிழக தேர்தல் ஆணையம், உளவுத்துறை, காவல்துறை உள்ளிட்ட அரசு இயந்திரங்கள் அனைத்தும் தவெகவுக்கு ஆதரவாக இடைத்தேர்தலில் செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார். முதல்வராக இருப்பதால்தான் விஜய் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார் என்றும் அவர் கூறினார்.
முதல்வர் விஜய்க்கு சரமாரிக் கேள்விகள்
நடிகராக இருந்தபோது அனைவருடனும் விமானத்தில் பயணித்த விஜய், முதல்வரான பிறகு ஏன் தனி விமானத்தில் பயணிக்கிறார் என்று சீமான் கேள்வி எழுப்பினார். மேலும், “தனி விமானத்தில் பயணிப்பதற்கு யாருடைய பணம் பயன்படுத்தப்படுகிறது?” என்றும் கேள்வி எழுப்பினார்.
காமராஜருடன் விஜய்யை ஒப்பிடுவதற்கு எதிர்ப்பு
அமைச்சர் விஸ்வநாதன், காமராஜரையும் விஜய்யையும் ஒப்பிட்டுப் பேசுவது குறித்தும் சீமான் விமர்சனம் செய்தார். “காமராஜர் பல கோடி ரூபாய் செலவில் பேனர்கள் வைத்து விளம்பரம் செய்தாரா? விஜய்யுடன் காமராஜரை ஒப்பிட்டுப் பேசி அவரை ஏன் கேவலப்படுத்துகிறீர்கள்? அமைச்சர் விஸ்வநாதனைப் பதவியிலிருந்து நீக்கினால் இப்படிப் பேசுவாரா?” என்று கேள்வி எழுப்பினார்.
‘சிங்கப்பெண்’ திட்டம் எங்கே?
செஞ்சி பகுதியில் 7 வயது சிறுமி கடத்தப்பட்டு 10 முதல் 15 நாட்களாகியும் அவர் குறித்த தகவல்கள் வெளியாகாததைச் சுட்டிக்காட்டிய சீமான், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் தொடங்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ திட்டம் எங்கே போனது என்றும் கேள்வி எழுப்பினார். மக்கள் தேர்ந்தெடுத்த அரசு அவர்களுக்குப் பிரச்சினைகள் இல்லாமல் பார்த்துக்கொள்கிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். திமுகவை விட்டால் அதிமுக, அதிமுகவை விட்டால் திமுக என மாறி மாறி ஆட்சி அமைந்த நிலையில், தற்போது மாற்றுக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதைவிடக் கூடுதலான பிரச்சினைகள் இருப்பதாகத் தான் கருதுவதாகக் கூறினார்.
சிறைக் கைதிகள் தப்பிய விவகாரத்தில் கேள்வி
சிறையில் இருந்து கைதிகள் தப்பிச் சென்ற விவகாரத்தில் சிறைத்துறை அதிகாரி மாற்றப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய சீமான், இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று அமைச்சர் பதவி விலகுவாரா என்றும் கேள்வி எழுப்பினார்.
அம்பாசமுத்திரத்தில் போட்டியிடும் சீமான்
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இதனால் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி காலியாகியுள்ளது. இத்தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதில் தான் போட்டியிடப் போவதாக சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் வென்று சட்டப்பேரவைக்குச் செல்வது எனக்கு அவசியமாக இருக்கிறது. எப்படியாவது இந்த இடைத்தேர்தலில் வென்று சட்டப்பேரவைக்குள் சென்றுவிட வேண்டும் என்ற வெறியோடு இருக்கிறேன். என்னை வெற்றி பெற விடக்கூடாது என்று முதல்வர் விஜய்யும் வெறியோடு இருக்கிறார்” என்று தெரிவித்தார்.
மேலும், “நான் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை ஜீரோ கட்சி, தமிழக வெற்றிக் கழகத்தினர் ஏன் என்னைக் கண்டு பயப்படுகிறார்கள்? ஏன் என்னை விமர்சிக்கிறார்கள்?” என்றும் கேள்வி எழுப்பினார். அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு சட்டப்பேரவைக்குள் நுழைவதே தனது முக்கிய நோக்கம் எனத் தெரிவித்த சீமான், இந்த இடைத்தேர்தலில் அனைத்து தரப்பினருக்கும் அரசியல் ரீதியாகப் பதில் கிடைக்கும் வகையில் போட்டி அமையும் என்றும் கூறினார்.




