தமிழ்நாடு முழுவதும் கடந்த அக்.15-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டறங்கில் நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் விஜய், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அமைச்சர் மரியவில்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆதவ் ஆர்ஜுணா துவக்க உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, “ட்ரீம்ஸ் ஒலிம்பிக்ஸ் என்ற குறிக்கோளுடன் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. விளையாட்டுத்துறை சார்ந்த நிகழ்ச்சிகளில் தான் முதலமைச்சர் விஜய் அதிகமாக பங்கெடுத்துள்ளார்.
இதுவரை இல்லாத அளவில் முதல்முறையாக 27 லட்சம் பேர் முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பங்கேற்க ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். இது முதலமைச்சரின் வெற்றி. அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு விடுதிகள் அமைக்க வேண்டும், கிட்டத்தட்ட 30,000 பேரை விளையாட்டு விடுதிகளுக்கு கொண்டு வர வேண்டும் என்பது நம்முடைய கனவு.
தமிழ்நாட்டில் ரூ.83 கோடி முதலமைச்சர் கோப்பை போட்டிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதலமைச்சர் கோப்பைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தது நம் விஜய் அண்ணா தான். நாங்கள் விளையாடும் போதெல்லாம் ஷூ வாங்க கஷ்டப்பட்டிருக்கிறோம்; டயட் உணவு இல்லாமல் கஷ்டப்பட்டிருக்கிறோம்; இன்று நம்முடைய அரசு, சிறப்பாக விளையாடுவோர் குறித்த தகவலை சேகரித்து, விளையாட்டு விடுதிகள் அமைப்பதற்கான பணிகளை தொடங்கிவிட்டோம்; ஒரே ஒரு ஒலிம்பிக் பதக்கம் வெல்லுங்கள்; உலகின் நம்பர் 1 ஆக நீங்கள் மாறும்போது, ஒட்டுமொத்த பொருளாதாரமும் தமிழ்நாட்டையும் உங்களையும் தேடி வரும்.
1994ம் ஆண்டுக்குப் பிறகு மைதானங்கள் கட்டப்படவில்லை. உலகத்தரத்தில் ஒலிம்பிக்ஸ் நகரத்தை உருவாக்க முதலமைச்சர் விஜய் கூறியுள. நாம் சாதாரணமாக ஜெயிக்கக்கூடாது. ஒரு வரலாற்றை உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் கூறுவார்” என்று அவர் கூறினார்.




