“அனைவரையும் களத்தில் சந்திக்கிறேன்” என சாலை விபத்திற்கு பின் முதன் முறையாக இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி டெல்லியில் இருந்து காரில் புறப்பட்டு உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கிக்கு தனி நபராக வந்தார். அதிகாலையில் அவர் வந்த கார் சாலை தடுப்பில் மோதி விபத்தில் சிக்கியது. சிறு பள்ளத்தை தவிர்க்க காரை திருப்பியபோதுதான், கார் மோதி விபத்துக்குள்ளானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் படுகாயம் அடைந்த அவர், ஹரியானா அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் உதவியோடு பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் டெஹ்ராடூன் மருத்துவமனையில் ரிஷப் பந்த்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, விமானம் மூலமாக மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் ரிஷப் பந்த் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 3க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை அவருக்கு மேற்கொள்ளப்பட்டது.
நீண்ட நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சாலை விபத்திற்கு பின்பு முதல் முறையாக டிவீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது..
”மருத்துவக் குழுவினர் உதவியுடன் எனக்கு அறுவை சிகிச்சை சிறப்பாக நடந்து முடிந்தது. எனது காயங்களில் இருந்து மீண்டு வருகிறேன்.
குறிப்பாக இந்தியா கிரிக்கெட் வாரியம், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, அரசு அதிகாரிகள், எனது ரசிகர்கள், மருத்துவ குழுவினர், சக இந்திய வீரர்கள் உள்ளிட்ட அனைவரின் பிரார்த்தனைகள், மற்றும் உதவிகளுக்கு நன்றி.
அனைவரையும் களத்தில் சந்திக்கிறேன்.” என ரிஷப் பந்த் குறிப்பிட்டுள்ளார்.