அண்மையில் வெளியான புதிய திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள் நம் நெஞ்சில் பதிவதில்லை. ஆனால் ஆண்டுகள் பல கடந்த பின்னும் சில பாடல்கள் மட்டும், இன்னும் ரீங்காரமிட காரணம் என்ன?..
சங்கரருக்கு ஆறுதலை சண்முகருக்கு ஆறுதலை என இருபொருள் படும்படி பாடல்கள் எழுதுவதில் வல்லவர் கவி காளமேகப் புலவர். அவர் எழுதிய ‘தலை’ என முடியும் சொற்களில் திரைப்பட பாடல் எழுதும்படி தயாரிப்பானர் கேட்க, கண்ணதாசன் எழுதிய பாடல் தான் சரவண பொய்கையில் நீராடி என்ற பாடல். இது சத்தியம் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற அந்தப்பாடலில் “அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை, அந்த அண்ணலே தந்துவைத்தான் ஆறுதலை” என எழுதி முடித்திருப்பார் கவியரசு கண்ணதாசன்.
அவன் தான் மனிதன் திரைப்படத்தில் ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா என்ற பாடலில் சித்தர் பாடல்களில் இருந்து கையாண்டிருப்பார் கண்ணதாசன். அந்த பாடலில் இடம்பெற்ற ‘நான் இருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன் இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்’ என வரிகளை கையாண்டிருப்பார் கவியரசு. இந்த பாடல் வரிகளில் சந்திரனை விழுங்கும் பாம்பு உனக்கு என்ன வேண்டும் என கேட்பதாகவும், என்னை மெதுவாக விழுங்கு…முடிந்த வரை நான் இந்த உலக மக்களுக்கு வெளிச்சத்தை தருகிறேன் என சந்திரன் கூறுவதாக வந்த கற்பனையை தன் எழுத்தில் சுட்டிக்காட்டி இருப்பார் கண்ணதாசன்.
ராமன் சீதையுடன் வனவாசம் செல்லும்போது ராமனின் கால் பட்டு அதுவரை பாறையாக இருந்த அகலிகை, பெண்ணாக மாறியதாக கம்ப ராமாயணத்தில் ஒரு காட்சி வரும். கால் வண்ணம் இங்கே கண்டேன், கை வண்ணம் அங்கே கண்டேன் என கம்பர் குறிப்பிட்டிருப்பார். இந்த வரிகளை உள்வாங்கி கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல் தான் பால் வண்ணம் பருவம் கண்டு, வேல் வண்ணம் விழிகள் கண்டு என்ற பாடல், கண் வண்ணம் இங்கே கண்டேன் கை வண்ணம் அங்கே கண்டேன் என பாசம் திரைப்படத்தில் எளிய தமிழில் இனிய காதல் பாடலை தந்திருப்பார் கண்ணதாசன்.
காலங்கள் பல கடந்த பின்னும் நம் கருத்தைக் கவர்ந்த சில திரைப்பட பாடல்கள் இன்றளவும் நெஞ்சில் நிலைத்திருக்க காரணம் இதுதானோ?
- பி.ஜேம்ஸ் லிசா









