திருப்பூரில் ஆண் குழந்தையை கடத்திய பெண் கைது; பெற்றோரிடம் ஒப்படைப்பு!

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 7 நாளே ஆன ஆண் குழந்தையை கடத்திய பெண் கைது செய்யப்பட்டார். குழந்தையை போலீசார் தாயிடம் ஒப்படைத்தனர். திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்தவர் கோபி. அவரது…

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 7 நாளே ஆன ஆண்
குழந்தையை கடத்திய பெண் கைது செய்யப்பட்டார். குழந்தையை போலீசார் தாயிடம் ஒப்படைத்தனர்.

திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்தவர் கோபி. அவரது மனைவி சத்யா திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக கடந்த 18ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து 19ம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனிடையே இன்று சத்யாவின் கணவர் கோபி வேலை நிமித்தமாக வெளியே சென்று
இருந்த நிலையில் சத்யா தனது குழந்தையை அருகில் படுக்க வைத்து சிறிது நேரம்
தூங்கியுள்ளார். அவர் கண் விழித்து பார்த்த போது அருகில் படுக்க வைத்திருந்த குழந்தையை காணவில்லை.

இதையடுத்து மருத்துவமனை முழுவதும் தேடியும் குழந்தை கிடைக்காததால் சம்பவம் குறித்து போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது சந்தேகப்படும்படி பெண் ஒருவர் வந்து செல்வது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் உத்தரவின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஐந்து தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இதனிடையே இடுவாய் வாசுகி நகர் பகுதியை சேர்ந்த பாண்டியம்மா என்ற பெண்ணை
போலீசார் கைது செய்தனர். பாண்டியம்மா அப்பகுதி பொது மக்களிடம் தனக்கு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்ததாகவும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக நாடகமாடி குழந்தையை அப்பகுதி பொதுமக்களிடம் காண்பித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் போலீசாரிடம் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து பாண்டியம்மா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஆண் குழந்தையை மீட்டு  தாய்
சந்தியாவிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.