அதிகாலையிலேயே கேட்ட அலறல் சத்தம்… விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை… டெல்லியில் 4 பேர் உயிரிழந்த சோகம்!

டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் நேற்று (ஏப்.18) கனமழை வெளுத்து வாங்கியது. இதன்காரணமாக பெரும்பாலான இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, டெல்லியின் முஸ்தபாபாத் பகுதியில் இன்று (ஏப்.19) அதிகாலை நான்கு மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதன்பேரில், போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கப்பட்டதை அடுத்து 4 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். மேலும், 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதிகாலையிலேயே கட்டிடம் இடிந்த விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதி போலீசாரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. கட்டிடத்தின் இடிபாடுகளுக்கும் பலர் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.