திருவள்ளூரில் பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவர் பலி : அன்புமணி ராமதாஸ் கண்டனம்…!

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து மாணவர் உயிரிழந்துள்ள நிலையில் பள்ளிக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் அரசு ஆர்வம் காட்ட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

”திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த கொண்டாபுரம் கிராமத்தில் அரசு பள்ளியின் கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்ததில் யோகித் என்ற மாணவர் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மாணவர் யோகித்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சம்பந்தப்பட்ட பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்திருப்பதால் அதை புதிதாகக் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனால், மாவட்ட நிர்வாகமும், பள்ளிக்கல்வித்துறையும் எந்த அக்கறையும் காட்டாததன் விளைவு தான் ஓர் அப்பாவி மாணவரின் உயிர் அநியாயமான பறிபோயிருக்கிறது. மாணவரின் எதிர்காலம் குறித்து ஏராளமான கனவுகளுடன் இருந்த அவரது பெற்றோரின் துயரத்திற்கு ஆட்சியாளர்கள் எவ்வாறு ஆறுதல் கூறப்போகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான பள்ளிகளின் கட்டிடங்களும், சுற்றுச்சுவர்களும் இந்த நிலையில் தான் உள்ளன.

பள்ளிகளில் வகுப்பறைக் கட்டிடங்களை புதிதாகக் கட்டித் தருவதாக பேராசிரியர் அன்பழகன் பெயரில் புதிய திட்டம் ஒன்றை திமுக அரசு கொண்டு வந்தது. ஆனால், பலவீனமான நிலையில் உள்ள பள்ளிகளில் 10% பள்ளிகளில் கூட அந்தத் திட்டத்தின்படி சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது என்பதும் தெரியவில்லை. மாணவர்களின் உயிர்களைப் பறிக்கும் நிலையில் பள்ளிகளின் கட்டமைப்பை வைத்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் ’’கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற பெயரில் திரைத்துறையினரை அழைத்து வந்து கொண்டாட்டங்களை நடத்தி வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடமிருந்து எந்த அளவுக்கு விலகிச் சென்றிருக்கிறார் என்பதற்கு இது தான் சான்று ஆகும். இனியாவது வெட்டிக் கொண்டாட்டங்களை விடுத்து பள்ளிக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் அரசு ஆர்வம் காட்ட வேண்டும். பள்ளி சுவர் இடிந்து விழுந்த மாணவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.