டிசம்பர் 16 : வெற்றி தினத்தின் வீர வரலாறும்… சுவாரஸ்ய பிண்ணனியும்…

வங்கதேசம் என்னும் புதிய நாடு பிறப்பதற்கு காரணமான விஜய் திவாஸ் அல்லது வெற்றி தினத்தின் வரலாற்றை இத்தொகுப்பில் காண்போம்.

1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற்ற டிசம்பர் 16ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் வெற்றி தினமாக இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் அனுசரித்து வருகின்றன.

இந்தியாவிலிருந்து மதத்தின் காரணமாக பிரிந்து சென்ற பாகிஸ்தான் இரண்டாகப் பிரிந்தது ஏன்..? பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வங்கதேச மக்களுக்கு இந்தியா உதவியது ஏன்..? தெற்காசியாவில் புதிதாக ஒரு நாடு பிறப்பதற்கு இந்தியா காரணமானது எப்படி..? கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்க ஆங்கிலேயர்கள் முடிவு செய்திருந்த காலம் அது. ஒன்றுபட்ட இந்தியாவை காந்தியும், முஸ்லீம்களுக்கான தனி தேசத்தை முகமது அலி ஜின்னாவும் கனவு கண்டிருந்தனர். நிஜத்தில் ஜின்னாவின் கனவே பலித்தது.  அதன்படி 1945 ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவும் அதற்கு முந்தைய நாள் ஆகஸ்ட் 14ஆம் தேதி பாகிஸ்தானும் விடுதலை பெற்றன.

மேற்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட இன்றைய பாகிஸ்தானும் கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட இன்றைய வங்காளமும் அன்று ஒரே நாடாக இருந்தது. இரு பிராந்திய மக்களும் மதம் என்கிற ஒரு புள்ளியில் தேசமாக ஒன்றிணைந்திருந்தாலும், மொழி கலாச்சாரம் வரலாறு என்ன பல்வேறு கூறுகளில் வேறுபட்டிருந்தனர். மேற்கு பாகிஸ்தான் மக்களின் தாய் மொழி உருது ஆகும். அதேசமயம் கிழக்கு பாகிஸ்தான் மக்களான வங்காளிகளின் தாய்மொழி வங்காளம். புவியில் ரீதியாக மேற்கு பாகிஸ்தானை விட கிழக்கு பாகிஸ்தான் பகுதியானது அதிக வளங்களை கொண்டிருந்தது.

ஆனால் மேற்கு பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் கிழக்கு பாகிஸ்தானில்  எந்த வளர்ச்சி திட்டங்களையிம் மேற்கொள்ளவில்லை என வங்காள மக்கள் குற்றம் சாட்டினர்.  மேலும் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து வளங்களை மட்டும் எடுத்துக் கொண்ட அவர்கள் தொழிற்சாலைகளை மேற்கு பாகிஸ்தானில் அமைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கிழக்கு பாகிஸ்தானில் அமைக்கப்பட்ட ஒரு சில தொழிற்சாலைகளும் பெரும்பாலும் மேற்கு பாகிஸ்தானை சேர்ந்தவர்களுடையதாகவே இருந்தது.

தேசிய மொழி பிரச்சனையும் போலா புயலும்

1948 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் ஒரே தேசிய மொழியாக உருதை அறிவித்தார் முகமது அலி ஜின்னா. மக்கள் தொகையில் 56 சதவீதத்தை கொண்டுள்ள வங்காள மக்கள் வங்காளியையும் பாகிஸ்தானின் தேசிய மொழியாக சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி போராடினர். 1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய பேரணியில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த நாள், உலக தாய்மொழி தினமாக என்றும் வரலாற்றில் அனுசரிக்கப்படுகிறது.

1970 ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானை போலா என்ற புயல் தாக்கியது. இதில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். ஆனால் மேற்கு பாகிஸ்தான் அரசோ பொறுப்பற்ற முறையில் நிவாரண பணிகளை மேற்கொண்டதாக புகார்கள் எழுந்தன.

தேர்தலில் குளறுபடியும்.., சுதந்திர அறைகூவலும்..,

1970 ஆம் ஆண்டு பாகிஸ்தான் முழுவதிற்கும் பொது தேர்தல் நடந்தது. இதில் கிழக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஷேக் முஜிபுர் ரஹ்மானின் அவாமி லீக் கட்சி பெரும்பான்மையான இடங்களை வென்றது. ஆனால் கிழக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஒருவருக்கு நாட்டின் அதிகாரத்தை அளிக்க விரும்பாத அப்போதைய பாகிஸ்தான் ஜனாதிபதி யாஹ்யா கான் தேர்தல் முடிவுகளில் குளறுபடி செய்தார். பாகிஸ்தானின் பிரதமராக ஷேக் முஜிபுர் ரஹ்மான் பதவியேற்க தடைகளை உருவாக்கினார். இது வங்க மொழி பேசும் மக்களை சுதந்திர நாடு பெறுவதே தீர்வு என்ற நிலைக்குத் தள்ளியது.

சமூகம், பொருளாதாரம், அரசியல் என அனைத்து மட்டங்களிலும் மேற்கு பாகிஸ்தானால் வங்காள மக்கள் வஞ்சிக்கப்படுவதாக குற்றம் சாட்டி 1971 ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கான சுதந்திரப் பிரகடனத்தை அறிவித்தார் ஷேக் முஜிபுர் ரகுமான் . மேலும் சுதந்திரத்திற்காக போராட நாட்டு மக்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் மீது போர் தொடுத்தது. பாகிஸ்தான் ராணுவத்திற்கும் வங்க மக்களின் முக்தி வாகினி படைக்கும் இடையே நடைபெற்ற போரில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இறந்தனர். மேலும் ஆப்ரேஷன் சர்ச் லைட் என்ற பெயரில் கிழக்கு பாகிஸ்தான் மக்களின் மீது சித்திரவதைகளை ஏவியது பாகிஸ்தான் அரசு. போர்க்களத்தில் முன்னிலையில் நிற்கும் மாணவர்கள் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கான வங்கதேச பெண்களும் சிறுமிகளும் கற்பழிக்கப்பட்டனர்.

களமிறங்கிய இந்தியா.., சரணடைந்த பாகிஸ்தான் ..,

பாகிஸ்தான் ராணுவத்தின் துன்புறுத்தலால் சுமார் ஒரு கோடிக்கு மேலான கிழக்கு பாகிஸ்தானிய மக்கள் இந்தியாவிற்குள் அகதியாக நுழைந்தனர். அப்போது இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மக்களை அரவணைத்ததுடன், வங்கதேச விடுதலைப் போருக்கு ஆதரவும் அளித்தார். மேலும் பாகிஸ்தான் அரசு மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்களை பன்னாட்டு உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.

இதனால் இந்தியா மீது ஆத்திரம் கொண்ட பாகிஸ்தான் அரசு 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி ‘ஆப்ரேஷன் செங்கிஸ்கான்’ என்ற பெயரில் இந்தியாவின் 11 விமான படைத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலையடுத்து பிரதமர் இந்திரா காந்தி பாகிஸ்தான் மீது போர் அறிவித்தார். தரை, வான் ,கடல் என முப்படைகளும் பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்தியது.

ஆபரேஷன் ‘டிரைடன்ட்’, ‘பைத்தான்’ ஆகிய பெயர்களில் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை இந்தியா தாக்கியது. இந்தியாவின் தொடர்ச்சியான மற்றும் பலம் வாய்ந்த தாக்குதல்களால் பாகிஸ்தான் தனது ராணுவ பலத்தை இழக்க தொடங்கியது. சுமார் 13 நாட்கள் நடந்த இப்போர் 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் நாள் இறுதி கட்டத்தை எட்டியது. டாக்காவில் பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாஸி சுமார் 93 ஆயிரம் படைவீரர்களோடு இந்திய ராணுவத்திடம் சரணடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் வங்கதேசம் என்னும் புதிய நாடு பிறந்தது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளை இந்தியா மற்றும் வங்கதேசம் ஆக இரு நாடுகளும் விஜய் திவாஸ் அல்லது வெற்றி தினமாக கொண்டாடுகின்றன. இந்நாளில் 1971 ஆம் ஆண்டு போரில் இப்போரில் உயிரிழந்த வீரர்களின் தியாகத்தையும் நினைவையும் போற்றும் விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.