முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கோவையில் பள்ளி மாணவிகளுக்கு திடீர் உடல்நலக் குறைவு – அதிகாரிகள் ஆய்வு

கோவை, ராமநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9 மாணவிகளுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ள சம்பவம் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை ராமநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை 743 மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இன்று அப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இருவருக்கு திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அதே வகுப்பில் இருந்த சில மாணவிகளுக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து 9 மாணவிகளையும் தனிமைப்படுத்திய ஆசிரியர்கள், உடனடியாக மாணவிகளின் பெற்றோர்களுக்கும், மாநகராட்சி சுகாதாரத் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்பேரில் விரைந்து சென்ற மாநகராட்சி அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். அதேவேளையில் மாணவிகளின் பெற்றோர்களும் அங்கு வரவே உடல்நலக் குறைவு ஏற்பட்ட மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மாணவிகள் அனைவரும் பெற்றோர்களுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் மருத்துவர் பிரதாப், மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை அலுவலர் மருத்துவர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பள்ளிக்கு
விரைந்து வந்து உணவு, குடிநீர் மற்றும் பள்ளி வளாகத்தில் உள்ள சுகாதாரம்
ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும், அங்கு மாநகராட்சி வாகனம் மூலம் கொசு மருந்தும் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர் மருத்துவர் பிரதாப், உடல் நலக்குறைவு ஏற்பட்ட மாணவிகள் அனைவரும் வீட்டிலிருந்து உணவு மற்றும் தண்ணீர் எடுத்து வந்து பருகியவர்கள் என்றும், பள்ளி வளாகத்தில் சத்துணவோ, தண்ணீரோ உட்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் இரண்டு மாணவிகள் மட்டுமே வாந்தி, மயக்கம் காரணமாக
பாதிக்கப்பட்டதாகவும், மற்ற மாணவிகள் இருமல், லேசான காய்ச்சல் போன்றவற்றால்
பாதிக்கப்பட்டனர் என்றும் தெரிவித்தார்.

மேலும், எதன் காரணமாக அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது என்பது தொடர்பாக மாநகராட்சி சுகாதாரத் துறை, மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை ஆகியவற்றின் சார்பில் மூன்று குழுக்கள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், மருத்துவத் துறையினர் 12 பேர் அடங்கிய மூன்று சிறப்பு
மருத்துவக் குழுக்கள் அமைத்து அனைத்து மாணவிகளுக்கும் உடல்நல பரிசோதனை
மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

அதேவேளையில் கடந்த இரண்டு தினங்களாக தங்களது பகுதியில் சுகாதாரமற்ற தண்ணீர் விநியோகம் இருந்ததாகவும், அதன் காரணமாகவே மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்

இதனிடையே சம்பவம் நிகழ்ந்த ராமநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்
பள்ளியில் மாணவிகளுக்கான குடிநீர் வழங்கப்படுவதில்லை என்றும், கடந்த இரண்டு
ஆண்டுகளாகவே அங்கிருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி பழுது காரணமாக
பயன்படுத்தப்படாமல் இருந்து வருவதாகவும் கூறிய தலைமை ஆசிரியர் அதனால்
மாணவிகள் அனைவரும் வீட்டில் இருந்தே தண்ணீர் கொண்டு வர பள்ளி நிர்வாகத்தால்
அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் மற்றும் மாணவிகளிடையே காய்ச்சல் அதிக அளவில் பரவி வரும் நிலையில், கோவை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பது மாணவிகளுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் பெற்றோர்கள் அச்சத்துக்குள்ளாகிய உள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் மனு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு

தமிழ்நாட்டில் புதிதாக 1,724 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

G SaravanaKumar

”அதிமுக ஆட்சிக் கட்டிலில் அமர்வதை யாராலும் தடுக்க முடியாது”- அமைச்சர் செங்கோட்டையன்!

Jayapriya