கோவை மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 202 விளம்பரப் பதாகைகள் அதிரடியாக அகற்றப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொது இடங்களில் அரசியல் கட்சியினர் விளம்பரப் பதாகைகள் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளின்போது, நிகழ்ச்சிகள் நடைபெறும் மண்டபங்களில் மட்டும் பேனர் வைக்க அனுமதிக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் ஆணையின்படி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் இன்று கோவை மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் காவல் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின்போது முறையான அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த 202 விளம்பரப் பதாகைகளை அதன் உரிமையாளர்கள் மூலம் காவல் துறையினர் அகற்றினர்.
இனிவரும் காலங்களில் இது போன்ற பதாகைகளை முறையான அனுமதி இல்லாமல் வைப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
-ம.பவித்ரா








