‘அக்னிபாத்’ திட்டத்திற்கு எதிரான போராட்டம் ஒன்றில் மாணவர்களுடன் சிக்கிய பள்ளி வாகனத்தை காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் வரை ராணுவத்தில் பணியமர்த்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட அக்னிபாத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், அந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது.
ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். போராட்டத்தில் வன்முறையும் ஏற்பட்டது. தெலங்கானாவில் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட வன்முறையில் ரயிலுக்குத் தீ வைக்கப்பட்டது. அப்போது ரயில்வே போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
#WATCH | Bihar: A school bus, with children on board, got stuck in the road blockade by agitators in Darbhanga. The bus later managed to get out of the blockade with Police intervention.
The agitators were protesting against the #AgnipathRecruitmentScheme pic.twitter.com/E8lFLk9leD
— ANI (@ANI) June 17, 2022
இவ்வாறு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பீகார் மாநிலத்தில் தர்பங்கா பகுதியில் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த பள்ளி வேன் ஒன்று போராட்டக்காரர்களிடையே சிக்கிக்கொண்டது. ரயில்கள் எரிக்கப்படுவதும், பேருந்துகள், கடைகள் மீது கற்களை வீசியும் போராட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையில், போராட்டக்காரர்கள் மத்தியில் சிக்கிய பேருந்தின் நிலை குறித்து பெரும் கவலை மேலெழுந்தது.
இது சம்பந்தமான வீடியோவும் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டது. இதனையடுத்து போராட்டம் நடந்த பகுதிக்கு விரைந்த அம்மாநில காவல்துறையினர் போராட்டக்காரர்களிடமிருந்து பேருந்தை பத்திரமாக மீட்டனர்.
நாடு முழுவதும் 7 மாநிலங்களில் இந்த திட்டத்திற்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், இத்திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு விரைவில் தொடங்கும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தற்போது தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








