அக்னிவீர் பணிக்கான அறிவிப்பாணை இன்னும் 2 நாட்களில் வெளியிடப்படும் என்று ராணுவ தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.
முப்படைகளுக்கும் இளைஞர்களை அதிக அளவில் தேர்வு செய்யும் நோக்கில் அக்னிபாத் எனும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுபவர்கள் அக்னிவீர் என அழைக்கப்படுவார்கள் என அரசு அறிவித்துள்ளது.
17.5 வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. முன்னதாக இந்த வயது வரம்பு 21 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
வயது வரம்பை உயர்த்தக்கோரி பிகார், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற போராட்டத்தை அடுத்து இந்த ஆண்டு மட்டும் வயது உச்சவரம்பு 23 ஆக நிர்ணயிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அக்னிவீர் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இன்னும் 2 தினங்களில் வெளியிடப்படும் என்று ராணுவ தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார். அரசு இணையதளத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் அதன்பிறகு ராணுவத்தில் இணைவதற்கான பதிவு தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்வு செய்யப்படும் அக்னிவீர்களுக்கான பயிற்சி இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கும் என்று தெரிவித்துள்ள ராணுவ தளபதி, பயிற்சி முடித்தவர்களுக்கான பணி அடுத்த ஆண்டு மத்தியில் தொடங்கும் என கூறியுள்ளார்.
இதனிடையே, விமானப்படைக்கு அக்னிவீரர்களை தேர்வு செய்யும் பணி வரும் 24ம் தேதி தொடங்கும் என்று விமானப்படைத் தளபதி வி.ஆர். சவுத்ரி தெரிவித்துள்ளார். வயது உச்சவரம்பு இந்த ஆண்டு 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் ஏராளமான இளைஞர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் தரைப்படைக்கு படைவீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை. அதேநேரத்தில், விமானப்படை, கப்பற்படைகளில் காலிப்பணியிடங்களுக்குத் தேர்வுகள் தடையின்றி நடைபெற்றன.
தரைப்படைக்கு 2 ஆண்டுகளாக வீரர்கள் தேர்வு செய்யப்படாததால் அதில் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
அக்னிபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் இணைய இளைஞர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது ஒரு Golden Opportunity என தெரிவித்துள்ள அவர், இதைப் பயன்படுத்தி ராணுவத்தை வலுப்படுத்தவும் நாட்டிற்கு சேவை செய்யவும் இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.













